பாறுக் ஷிஹான்



-----------
திருட்டு வேலைகளில் ஈடுபடுகின்றவர்களில் கணிசமானோர் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப் தெரிவித்தார்.

திருடர்கள் குறித்து பொதுமக்கள் தமது பிரதேசங்களில் விழிப்பாக இருக்க வேண்டுமென்றும், தங்கள் பகுதிகளில் அசாதாரணமாக உலவுகின்றவர்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். 

ஓர் ஊரில் அல்லது ஒரு சமூகத்தில் குற்றச் செயல்களை ஒழிக்க வேண்டுமாயின் அங்குள்ளவர்கள் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 'மீலாத் நகர்' கிராமத்தில் (அட்டாளைச்சேனை 05ஆம் பிரிவு) குற்றச் செயல்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, நேற்று (27) வெள்ளிக்கிழமை அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஹசீப் - மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

அண்மைக்காலமாக மீலாத் நகர் கிராமத்தில் ஏராளமான திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், பெறுமதிமிக்க பொருட்களும் திருடர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இவை குறித்து - அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் முறைப்பாடு செய்துள்ள நிலையிலேயே, குற்றச் செயல்களுக்கு எதிரான மேற்படி விழிப்புணர்வு நிகழ்வை 'மீலாத் நகர் நலன்புரி அமைப்பு' ஏற்பாடு செய்திருந்தது. 

அங்கு பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஹசீப் தொடர்ந்து பேசுகையில்;

"இங்குள்ள அதிகமான வீடுகளில் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் இலலை என்பதுதான், இந்தக் கிராமத்தில் குற்றச் செயல்கள் நடப்பதற்கு பிரதான காரணமாகும்.  இங்குள்ள நிலையான குடியிருப்பாளர்களின் வீடுகளில் திருட்டு நடைபெற்றதாக முறைப்பாடுகள் இல்லை. 

வசதி படைத்தவர்கள் இங்குள்ள தமது வீடுகளில் அவர்களின் பெறுமதியான பொருட்களை வைத்து விட்டு, அவர்கள் வசிக்கும் வேறு வீடுகளுக்குச் சென்று விடுகின்றனர். அந்தப் பொருட்களுக்குப் பாதுகாப்பும் இல்லை. இது திருடர்களுக்கு வசதியாகப் போய்விடுகிறது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"இங்கு நடந்த திருட்டுச் சம்பங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளோம். அவர் நீதிமன்ற உத்தரவின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். திருடர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குப் பயப்படாமல் பொலிஸ் நிலையத்தில் முறையிடுங்கள். நிச்சயமாக உங்களுக்கு நாம் உதவுவோம்" எனவும் அவர் இங்க தெரிவித்தார்.

இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கிய - ஓய்வுபெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல். வாஹிட் உரையாற்றுகையில், மீலாத் நகர் கிராமத்தின் வரலாறு பற்றி நினைவுபடுத்தினார்.

1997ஆம் ஆண்டு அட்டாளைச்சேனையில் தேசிய மீலாத் நபி விழா நடைபெற்ற போது, அப்போது புனர்வாழ்வு அமைச்சராக இருந்த - முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரப்பின் முயற்சியினால், தேசிய மீலாத் நபி விழா நினைவாக உருவாக்கப்பட்டதே - மீலாத் நகர் எனும் இந்தக் கிராமம் என, அவர் குறிப்பிட்டார்.

"இந்தக் கிராமத்தை எந்த விருப்பத்தின் அடிப்படையில் அஷ்ரப் உருவாக்கினாரோ, அது நினைவேறவில்லை".

"தற்போதைய மீலாத் நகர் கிராமத்தின் முன்னைய பெயர் - பெரிய முல்லைத்தீவு. இந்தக் கிராமத்தில் 110 வீடுகள் அமைப்பதற்கான நிதியுதவி அஷ்ரப்  காலத்தில் வழங்கப்பட்டது. இங்கு பாடசாலை, பள்ளிவாசல் அமைக்கப்பட்டன. மூலைமுடுக்குகளெல்லாம் வீதிகள் நிர்மாணிக்கப்பட்டன. 10 பொதுக்கிணறுகள் அமைக்கப்பட்டன".

ஆனால், இந்தக் கிராமத்தில் இருந்தவர்கள் இங்கிருந்து கணிசமானளவு வெளியேறிச் சென்று விட்டார்கள் என்றும், அதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேசிய மீலாத் நபி விழாவின் நினைவாக உருவாக்கப்பட்ட மீலாத் நகர் கிராமத்தில் அதிகளவான குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றமை கவலைக்குரிய விடயமாக உள்ளது என, இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அட்டாசளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முஸாபிர் தெரிவித்தார். 

"ஒரு காலத்தில் வேறு நாடுகளிலும், தூரத்து ஊர்களிலும் பாவிக்கப்படுவதாக ஊடகங்கள் மூலம் நாம் அறிந்து வைத்திருந்த போதைப் பொருட்கள், இப்போது நமது ஊரிலும், நமது வீடுகளுக்குள்ளும் பயன்படுத்தப்படுகின்றன.

தமது வீடுகளுக்குள் - தமது பிள்ளைகள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகி விட்டமையை, வெளியில் சொல்வதற்கு வெட்கப்பட்டு, பலர் மறைக்கின்றனர்" என, அவர் இதன்போது குறிப்பிட்டார்.

"சில பாடசாலைகளில் போதை வியாபாரம் நடைபெறுவதாக செய்திகள் வருகின்றன. ஆனால், பாடசாலையின் பெயர் கெட்டுவிடும் என நினைத்து, அதனை பாடசாலை நிர்வாகத்தினர் மூடி மறைக்கின்றார்கள். 

குற்றச் செயல்களைத் தடுப்பது  - பாரிய கூட்டுப் பொறுப்பு என்கின்ற போதும், ஒவ்வொரு பெற்றோரும் அந்தக் கூட்டுப் பொறுப்பின் முதன்மையானவர்களாக இருக்க வேண்டும். 

பாடசாலைகளோ, பிரதேச செயலகமோ, பொலிஸாரோ குற்றங்களை தடுப்பதில் தனித்து இயங்க முடியாது.

போதைப் பொருளை எங்காவது கண்டு பிடித்தால், அந்த இடத்தின் உரிமையாளர் - அதுபற்றி தமக்கு தெரியாது எனக் கூற முடியாது. அப்படிக் கூறுவதை சட்டமும் ஏற்றுக் கொள்ளாது" என, உதவி பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா தெளிவுபடுத்தினார்.

"நமது பிள்ளை நமக்குத் தெரியாமல் வீட்டுக்குள் போதைப் பொருளைப் பயன்படுத்தி வரும் நிலையில், நமது வீட்டுக்குள்ளிருந்து போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றினால், அதற்கு அந்த வீட்டிலுள்ள பெற்றோர்தான் வகை சொல்ல வேண்டி வரும்.

எனவே, குற்றச் செயல்களுக்கும் போதைப் பழக்கத்கத்துக்கும் எதிரான பாரிய மாநாடு ஒன்றினை அட்டாளைச்சேனையில் நடத்துவதற்கு - ஊர் முக்கியஸ்தர்கள் முன்வர வேண்டும். குறிப்பாக பெண்கள் அதில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்" என, சட்டத்தரணி நஹீஜா கோரிக்கை விடுத்தார்.

இதன்போது, மீலாத் நகர் கிராமத்தில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு உதவுமாறு கோரிக்கை விடுக்கும் மகஜர் ஒன்றை -  அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பாளர் ஹசீப்பிடம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் காதர் கையளித்தார். இதன்போது, மீலாத் நகர் நலன்புரி அமைப்பின் தலைவர் ஐ.எல். சஹீல், செயலாளர் ரி.எம். இம்தியாஸ் மற்றும் பொருளாளர் எம்.ஐ. சியாத் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல். பாயிஸ், அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரனி எம்.எஸ். ஜுனைதீன், அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி யூ.எல். நியாஸ், உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் மற்றும் குடியிருப்பாளர்களும் கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours