(நூருல் ஹுதா உமர்)

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) கடந்த ஐந்து நாட்களாக நாடாளாவிய ரீதியில், மாகாண மட்டத்தில் நடத்தப்பட்டு வரும் அமைதி ஆர்ப்பாட்டங்களின் ஐந்தாம் நாள் நிகழ்வாக இன்று 2023.11.08 மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில், மருத்துவர்களுக்கான பொருளாதார நீதியை வழங்குவதற்கான திட்டவட்டமான செயல்திட்டத்தை அதிகாரிகளால் அறிவிக்க இயலாமைக்கு எதிரான அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இலங்கையின் சுகாதாரத்துறையில் தற்போது நிலவி வரும் பாரிய பல பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குமாறு இதன்போது அரசினை வலியுறுத்தப்பட்டது.

இதன் ஒரு அங்கமாக கல்முனை பிராந்தியத்தின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கிளைகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிராந்திய ரீதியான ஆர்ப்பாட்டம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இன்று நடைபெற்றது. இதில் கல்முனை பிராந்தியத்தின் வைத்தியர்கள் பலர் பங்கு பற்றினார்கள். தங்களது நியாயமான கோரிக்கைகளான:

1. வைத்தியர்கள், நாட்டில் தற்போது காணப்படும் எதிர்மறையான, பொருளாதார நெருக்கடியான சூழலினால் நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாடு செல்வதால் நாட்டில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்கு நியாயமான தீர்வு. அவர்களை நாட்டில் தக்க வைப்பதற்கான தகுந்த தீர்வை வழங்கல்.

2. வைத்தியர்களின் தட்டுப்பாட்டினால் கிராமிய வைத்தியசாலைகள் பல மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்குவது.

3. விஷேட வைத்திய நிபுணர்கள் அதிகளவில் நாட்டை விட்டு வெளியேறுவதனால், பல விசேட வைத்திய சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் அபாயம்.

4. வைத்தியர்களுக்கு பொருளாதார ரீதியான எந்த ஒரு மேம்பாடும் அரசினால் இதுவரை வழங்கப்படாமல் இருப்பது.

5. நியாயமற்ற வரிக் கொள்கையினால் வைத்தியர்களுக்கு மேலும் மேலும் பொருளாதார ரீதியான நெருக்கடிகளை வழங்குவது.

6. வைத்தியசாலைகளில் மருந்து பொருட்கள், மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு.

7. தரமற்ற மருந்துப் பொருட்களின் இறக்குமதி.

8. வைத்தியர்களின் தொழில்முறை அபிவிருத்தியை மேலோங்க செய்யும் செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தாமை.

போன்ற பலபிரச்சினைகளுக்கு அரசு இதுவரை உரிய மற்றும் நியாயமான தீர்வுகளை வழங்காமல் இழுத்தடிப்பது. இதனால் நாட்டில் இலவச சுகாதாரத் துறை பாரிய ஒரு அபாயத்தை எதிர்நோக்குவது, போன்ற பல விடயங்களை இதன் போது வலியுறுத்தப்பட்டது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours