( வி.ரி.சகாதேவராஜா)

பெற்ற ஊரையும் கற்ற பாடசாலையையும் ஒரு போதும் மறக்க கூடாது.

என்று வீரமுனை பாராட்டு விழாவில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தெரிவித்தார்.

வீரமுனையிலிருந்து பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியற் கல்லூரிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களுக்கான மாபெரும் பாராட்டு விழாவும்  கௌரவிப்பு விழாவும் நேற்று முன்தினம்(19) ஞாயிற்றுக்கிழமை  வீரமுனை ராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வீரமுனை 2கே2 சமூகநல அமைப்பு அதன் ஆலோசகர் ஏ.சுதர்சன் தலைமையில் நடாத்திய இந்த பெரு விழாவில், ஆன்மீக அதிதியாக வீரமுனை  சிந்தாயாத்திரை  பிள்ளையார் ஆலய பிரதம குரு ஸ்ரீ நிமலேஸ்வர குருக்கள், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்கள்.

பிரதம அதிதி மேலும் உரையாற்றுகையில்..

உயர் கல்வியை தொடரும் நீங்கள் இந்த கிராம முன்னேற்றத்தில் கூடுதலான பங்களிப்பைச் செய்ய வேண்டும். அது உங்கள் கடமையும் கூட. 
இந்த வீரமுனை  2கே2 அமைப்பு பல்வேறு சமூக பணிகளை செய்து வருவது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.


விழாவில், கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ் எல் எம். ஹனீபா, உதவி கல்விப் பணிப்பாளர்களான பி பரமதயாளன், விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா, சம்மாந்துறை பொலீஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி எம்.சமீம் ,விசேட அதிதியாக பாடசாலை அதிபர் ஈ.தயாநிதி ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

முன்னதாக அதிதிகள் மற்றும் பாராட்டு பெறும் மாணவர்களுக்கு பிரதான வீதியிலிருந்து பாண்ட் வாத்தியம் சகிதம் பெருவரவேற்பு அளிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல்கலைக்கழகம் மற்றும் கல்வி கல்லூரிக்கு சென்ற சுமார் 37 மாணவர்கள் இந்த அமைப்பினால் பதக்கம் சூட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். 
 அமைப்பின் தலைவர் எம் கமல், செயலாளர் ஆர்.யோகலட்சுமி, பொருளாளர் என்.யோகேஸ்வரன் உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்கள் அதிதிகளுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார் கள்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours