(எஸ்.அஷ்ரப்கான்)

இலங்கையின் நாலாபுரங்களிலும் பலத்த மழை பெய்து வருகின்றது இதனால் பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது இதேவேளை வயல் நிலங்களும் வெள்ளக்காரடாக காட்சியளிக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக பெய்துவரும் மழைகாரணமாக  தொடர்ந்தும் மழைபெய்தால் மேலும் நிலைமை மோசமடையலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக வயல்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி நீர் நிலை போன்று காட்சியளிக்கின்றது. 

இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் சேனநாயக்க சமுத்திரத்தின் வாழ்தலவுகள் திறக்கப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் வெள்ள அபாயம் எதிர் நோக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை காரணமாக இன்று (10.01.2024) புதன்கிழமை முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் உள்ள அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு இன்று முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக (SEUSL) ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 2024 ஜனவரி 16 ஆம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எம்.ஐ.நௌபர் தெரிவித்தார்.

தற்போதைய காலநிலை முன்னறிவிப்புகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகளை கவனமாக ஆராய்ந்த பிறகு பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதேவேளை சம்மாந்துறை வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று செயற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் வளாகத்தில் விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும் தங்களது பாதுகாப்பு கருதி இன்று பிற்பகல் 05:00 குள் வெளியேறிவிட வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளனர்.

மேலும் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் தற்போது நிலவும்மழை நிலைமை நாளையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதுடன் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப.1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படு கின்றார்கள். 

அம்பாறை இக்கினியா கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக 108.5 அடிகளாக தற்போது உயர்ந்திருக்கின்றது.  7 இலட்சத்து 70 ஆயிரம் மொத்த கொள்ளவுள்ள இந் நீர்த்தேக்கத்தின் 5 வான் கதவுகளும் திறக்கப்பட்டு 5.5 அடிகளாக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours