( வி.ரி.சகாதேவராஜா)


கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இராசரெத்தினம் முரளீஸ்வரன் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளராக  சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, அவர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியை மேலதிகமாக கடமையாற்றவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, 
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக, அம்பாந்தோட்டை வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த  வைத்திய கலாநிதி டாக்டர்.  ஏ.பி.ஆர்.எஸ்.சந்திரசேன  நியமிக்கப்பட்டு அவர் கடந்த 2ஆம் திகதி கடமையேற்றுள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் நேற்று வியாழக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இது இவ்வாறிருக்க, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி பதவி உயர்வு பெற்று வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்ட வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் கடமைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் மேலதிக பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் நியமிக்கப்பட்டார் .

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் புதிய பணிப்பாளராக கடமையேற்ற வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரனை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஆர்.நவலோஜிதன் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், பிராந்திய சுகாதார பணிமனையின் உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வரவேற்றதனைத் தொடர்ந்து அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் பதவியுயர்வு பெற்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளராக பதவியேற்றுள்ள நிலையில் குறித்த கடமைக்கு மேலதிகமாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமைப் பொறுப்பினை  ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த எட்டு வருட காலமாக அர்ப்பணிப்புடன் சிறந்த சேவை செய்து வைத்தியசாலையின் பாரிய வளர்ச்சியில் அபரிமிதமான பெரும் பங்காற்றிய டாக்டர் இரா முரளீஸ்வரன் அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours