(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

களுத்துறை மாவட்டத்தில் உள்ள வியன்கல்லைப் பகுதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேருவளை சீனன் கோட்டைப் பகுதி வாழ் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் வியன்கல்லை ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாக சீனன் கோட்டைப் பிரமுகர்களினால் கையளிக்கப்பட்டன.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 550 குடும்பங்களுக்கு இதன் போது உலர் உணவுப் பொதிகள் பள்ளிவாசல் நிர்வாகிகளான, அல்ஹாஜ் எச்.எம்.எம்.றியாஸ் மற்றும் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.இஷாக் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.

வெள்ளம் ஏற்பட்ட கடந்த 2 ஆம் திகதி முதல் சீனன் கோட்டைப் பகுதி சமூக சேவையாளர்கள் குழுவினர் வியன்கல்லைக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை இரவு, பகல் என வழங்கியதோடு, நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகு மூலமும் சென்று இவர்கள் உதவிக் கரம் நீட்டியுள்ளனர். இவர்களின் தியாகமிகு சேவைகளுக்கும், உலர் உணவுப் பொதிகள், சமைத்த உணவுகளை உடனுக்குடன் பெற்றுக் கொடுத்த சீனன் கோட்டை வாழ் மக்களுக்கு வியன்கல்லை வாழ் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours