குன்று தோறாடும் குமரனை தரிசிக்க கதிர்காமத்திற்கான 2024 ஆம் ஆண்டுக்கான கானக பாதயாத்திரை நாளை  (30)  ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமாகின்றது.

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் விழா மகோற்சவம் எதிர்வரும் யூலை மாதம் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி யூலை மாதம் 22 ஆம் தேதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

அதனை முன்னிட்டு நாளை மறுநாள் 30 திகதி ஞாயிற்றுக்கிழமை உகந்தை முருகன் ஆலயத்தில் இருந்து பிரதம குரு சிவ ஸ்ரீ க.கு. சீதாராம் குருக்களின் விசேட அதிகாலை  பூஜையுடன் கதிர்காம காட்டுப்பாதை திறக்கபடுகிறது.

இம்முறை காட்டுப் பாதை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜனின் வழிகாட்டலில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம முன்னிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைக்கவிருக்கிறார். 

உகந்தையில் இருந்து காட்டுக்குள்ளே குமண, குமுக்கன் ஆறு,வெட்டை, உப்பாறு, நாவலடி, வியாள, வள்ளியம்மன் ஆறு பாலம், கட்டகாமம், வீரச்சோலை வழியாக கதிர்காமத்தை அடைந்து இறையருள் முழுமை பெறும் பயணம்.

மனதுக்கு அமைதி தரும் பயணம். பல்லாயிரம் பேர் வாழ்க்கையில் தெய்வீக மாற்றத்தை முருக பெருமானே நேரடியாக வந்து வழிநடத்தும் பயணம். குறைந்தது ஆறு நாட்கள் பயணிப்பது வழமை.

முருகப் பெருமானின் வழித்தடத்தை ஒற்றி, அகத்தியர், புலத்தியர், காசியப்ப முனிவர், கபில முனிவர், போகர், பாபாஜி, கோரக்கர், அருணகிரிநாதர், யோகர் சுவாமிகள் உட்பட பல சித்தர்களும், முனிவர்களும், யோகிகளும், ஞானிகளும் நடந்து வந்த பாதையில் எமது பாதங்களையும் பதித்து குமனை, யாளை, கட்டகாமம் ஆகிய காடுகளை கடந்து, ஆறு நாட்களாக பாத யாத்திரை சென்று கதிர்காம கந்தனை தரிசிகின்றனர்.

இப்புனித பாதயாத்திரையில் இலங்கையில் உள்ள பல பகுதிகளிலும் இருந்து சுமார் 40,000 பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். எனினும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இருந்தே அதிகளவான யாத்திரீகர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இவ்விரு மாவட்டங்களிலும் இருந்து 80 சதவீத பக்தர்கள் புனித யாத்திரை வருகின்றமை  குறிப்பிடத் தக்கது. 

2000 வருட பாரம்பரியமிக்க இந்த புனித பாத யாத்திரையானது ஆன்மீக பயணம் என்பதையும் தாண்டி வாழ்க்கையில் ஒரு புதிய பரிமாணத்திற்கே நம்மை கூட்டி செல்கிறது.

இந்தக் கதிர்காம பாதயாத்திரை, தீராத இன்னல்களையும், சொல்லொணா துயரங்களையும், பாரிய பிரச்சினைகளையும் வேண்டுதல்கள் மூலம் தீர்க்கும் அற்புதமான களமாகும். 

தீராத நோய் நொடிகள் தீர அருள் வேண்டி, குழந்தை வரம் வேண்டி, திருமண வரன் வேண்டி, நிம்மதியான வாழ்க்கை வேண்டி, மன நிம்மதி வேண்டி, கல்வி வேண்டி, தொழில் வேண்டி, பதவி உயர்வு வேண்டி, செல்வம் வேண்டி, வீடு வேண்டி, வெளிநாட்டு பயணம் வேண்டி இப்படி எத்தனையோ வேண்டுதல்களை மனம் உருகி முருகப்பெருமானிடம் கேட்கும் களம் இது.
 
பக்தர்களின் பலவிதமான நேர்த்திக்கடன்களை நிறைவு செய்யும் பாதை இது. 

தனது தீராத நோய் தீர்ந்த மகிழ்ச்சியுடன் வயோதிபர்கள், தனக்கு பல ஆண்டுகளின் பின் பிள்ளை வரம் கிடைத்த பெருமிதத்தில் கைக்குழந்தையுடன் தாய்மார்கள், தடைப்பட்ட திருமணம் நிறைவேறிய நிலையில் ஆனந்தத்துடன் இளம் தம்பதிகள், குடும்ப பிரச்சினைகள் தீர்ந்த மன நிம்மதியுடன் பெரியவர்கள், மகளைக் கரையேற்றிய பேரானந்தத்துடன் பெற்றோர்கள், பரீட்சையில் சித்தியடைந்த குதூகலத்துடன் மாணவர்கள், வெளிநாட்டுப் பயணம் கைகூடிய நிலையில், தொழில் கிடைத்த உற்சாகத்துடன் இளைஞர்கள் இப்படி எத்தனையோ விடயங்களைத் தாங்கி செல்லும் பாதை இது.

இவை மட்டுமா? ஆன்மீக பயணம், பக்தி வழிபாடு என்பதையும் தாண்டி இன்னும் பல விடயங்கள் இப்பாதயாத்திரையில் உள்ளன. 

ஏழை, பணக்காரன், உயர்ந்தோர், தாழ்ந்தோர், படித்தவன், படிக்காதவன், தொழிலாளி, முதலாளி என்ற பேதமின்மை, ஏராளமான புதிய நண்பர்களின் அறிமுகம், ஒன்றாக இருந்து உணவு உண்ணுதல், அனைவருக்கும் பகிர்ந்தளித்து உண்ணுதல், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் மனப்பான்மை, உடல் சுகாதாரம், எளிமை, ஒற்றுமை, கூட்டுப் பிரார்த்தனை, பஜனை வழிபாடு என பல நன்மை பயக்கும் விடயங்களை இந்த பாதயாத்திரை நமக்குக் கொடுக்கிறது. 
காட்டுக்குள் இறங்கி விட்டால் அனைவரது சுய நாமங்கள் மறந்து "சாமி" என அழைக்கப்படுவது மற்றுமொரு மரபாகும்


இவை மட்டுமல்ல! இன்னும் பலவற்றை நாம் பார்த்து, கேட்டு, ரசித்து, உணர்ந்து. அனுபவித்துச் செல்கிறோம். காடு, ஆறு, குளம், களப்பு, வெளி, மலை, சேறு, மணல், தென்றல், கூதல்காற்று, கச்சான்காற்று, மழை, சுட்டெரிக்கும் வெயில், பனி இப்படி இயற்கை நமக்களித்த கோடை இங்கே கொட்டிக் கிடக்கிறது. 

அழகிய மலைகள், வெளிகள், காடுகளைப் பார்த்து ரசித்து, காட்டு மூலிகைகளைத் தழுவி வரும் ஆறுகளில் குளித்து, சுத்தமான நல்ல காற்றை சுவாசித்து, மூலிகைகள் நிறைந்த காற்றை உடலில் படச் செய்து, புல் தரைகளிலே, ஆற்று மணலிலே, மரங்களின் கீழே படுத்து உறங்கி, காட்டிலே தேவாமிர்தமாகக் கிடைத்த உணவை அளவாக உண்டு மகிழ்ந்து, பறவைகளின் கீச்சொலிகளைக் கேட்டு, இறைவனின் நாமத்தை எந்நேரமும் உச்சரித்து, இந்த உணர்வுகளை எல்லாம் அனுபவித்து, அசைபோட்டு... அப்பப்பா! எத்தனை மனநிறைவான விடயங்கள்.
 
நாம் வாழும் சூழலில், நகரத்தில் எள்ளளவும் எண்ணிக் கூடப் பார்க்க முடியாத அத்தனையும் இந்த பாதயாத்திரை மூலம் நமக்குக் கிடைக்கிறது. 

பணமும், பதவியும், புகழும், சுகமும் மட்டுமா வாழ்க்கை? அதை விட நாம் பெற வேண்டியவை எத்தனையோ உள்ளன என்பதை உணர்த்தும் யாத்திரை இது. 

போலியாக, நிழலாக வாழும் எமக்கு உண்மையை, நிஜத்தைக் காட்டும் இந்தப் பாத யாத்திரையின் பேரானந்தத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் கதிர்காமத்திற்கு ஒரு முறையாவது பாதயாத்திரை செல்ல வேண்டும்.  

மொத்தத்தில் ஒரே வார்த்தையில் சொன்னால் முருக பெருமானே நேரடியாக பயணத்தில் அனைவரையும் அழைத்து செல்கிறான். இது மட்டும் உண்மை.

விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா
(ஒருங்கிணைப்பாளர் - யாழ்.சந்நதி - கதிர்காமம் பாதயாத்திரைக்குழு)

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours