இ.சுதா


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி எடுக்கும் முடிவுகள் அடுத்த பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு பாதகம் ஏற்படாத வகையில் இருக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் உபதலைவரும், மேனான் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் எந்த ஜனாதிபதி தேர்தலிலும் இல்லாத வகையில் இம்முறை வடகிழக்கில் உள்ள 83, சமூக அமைப்புகள் ஒன்றுணைந்து தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி வடகிழக்கு தமிழ்த்தேசிய பலத்தை காட்ட வேண்டும் என்ற கொள்கைரீதியிலான முன் எடுப்பை ஏற்படுத்தி அதனை செயல் வடிவம் கொடுத்து பிரசாரங்களை முன்எடுத்து வருகின்றனர்.

அதற்காக வடகிழக்கில் உள்ள தமிழ்தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவைகளையும் கோரியுள்ளனர்.

இதன் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வடகிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் மத்தியில் மூன்று விதமான நிலைப்பாடுகள் உள்ளதை அவதானிக்கலாம், தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிதல், தேர்தலை பகிஷ்க்கரித்தல், பெரும்பான்மை வேட்பாளர் ஒருவரை ஆதருத்தல். இந்த மூன்று நிலைப்பாடுகளில் தமிழ்த்தேசிய அரசியலை மட்டும் முன்னெடுக்கும் கட்சிகளில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வழமைபோன்று ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஏனைய கட்சிகளான தமிழீழவிடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்மக்கள் விடுதலைக்கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த்தேசியகட்சி, என்பன பொதுவேட்பாளருக்கு முழுமையான ஆதரவை தெரிவித்து உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஆனால் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி உத்தியோகபூர்வமாக எந்த முடிவுகளையும் இதுவரை எடுக்கவில்லை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எடுக்கும் எந்த முடிவுகளும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாதிப்பு ஏற்படாதவகையில் அமையவேண்டும்.

ஜனாதிபதிதேர்தலில் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக 83, தமிழ் அமைப்புகள் குறிப்பாக யாழ்பல்கலைக்கழக மாணவர்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகள் வெளிப்படையாக பிரசாரம் செய்யும் நிலையில் அவர்களுக்கு மாறாக அல்லது பொதுவேட்பாளரை தோற்கடிக்கும் விதமாக தமிழரசுக்கட்சி ஜனாதிபதி தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டால் அது நிச்சயமாக பொதுத்தேர்தலில் தமிழ்சுக்கட்சி தமிழ் மக்களில் இருந்து ஓரம் கட்டப்படுவார்கள் என்பது தவிர்கமுடியாது.

ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு உடனே யார் ஜனாதிபதியானாலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் இடம்பெறும் இதற்கு மாற்றுக்கருத்துகள் இல்லை.தமிழ்த்தேசிய கொள்கையுடன் தொடர்ச்சியாக மக்களிடம் வாக்கு கேட்கும் தமிழரசுக்கட்சி பொது அமைப்புகளை பகைத்து பொதுத்தேர்தலில் வாக்குகளை பெற முடியாது.

“ஊர் ஓடினால் ஒத்தோடவேண்டும் தனித்து ஓடமுடியாது” என்ற பழமொழிக்கு அமைவாக ஏனைய தமிழ்தேசியகட்சிகள், 83, பொது அமைப்புகள் எடுக்கும் தீர்மானத்தை நிராகரித்து பெரும்பான்மை வேட்பாளர் ஒருவரை தனியே தமிழரசுக்கட்சி ஆதரிக்கவேண்டும் என்ற எந்த காரணமும் இல்லை இது எனது தனிப்பட்ட கருத்து.

பெரும்பான்மை ஜனாதிபதிகளை கடந்த காலங்களில் ஆதரித்தும் எந்த பயனும் இல்லை 37, ஆண்டுகளுக்கு முன் 1987, நவம்பர்,14, ம் திகதி நிறைவேற்றப்பட்ட 13, வது அரசியல்யாப்பு திருதத்தின் அடிப்படையில் இதுவரை அதிகாரப்பகிர்வை வழங்க முடியாத பேரினவாத தலைவர்கள் இப்போது தேர்தலுக்காக தமிழ் தலைமைகளை ஏமாற்ற மீண்டும் 13, ஐ படம் காட்டுவதை ஏற்கமுடியாது எனவும் மேலும் கூறினார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours