( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் நேற்று அக்கரைப்பற்றில் நிரந்தர நியமனம் கோரியும் சம்பள உயர்வு கோரியும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டார்கள்.

நூற்றுக்கு மேற்பட்ட முவீனங்களையும் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் அக்கரைப்பற்று கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களின் வாரிய அலுவலக முன்றலில் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டார்கள்.

 அதன் போது பலவித சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷமெழுப்பினர்.

அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியை ஒருவர் கூறுகையில்..

 யாழ்ப்பாணத்தில் வடமாகாண சபையால் மாதாந்த கொடுப்பனவாக 15ஆயிரம் ரூபாய்  வழங்கப்படுகிறது. மத்திய அரசாங்கம் ஐயாயிரம் ரூபாய் வழங்குகிறது. ஆனால் கிழக்கு மாகாண சபை ஆக நான்காயிரம் ருபாய்  வழங்குகின்றது. இன்றைய பொருளாதார நெருக்கடி மிகுந்த இலங்கையில் இந்த கொடுப்பனவு ஒன்றுக்குமே போதாது. எனவே முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்துடன் கூடிய நிரந்தர பதவியில் அமர்த்தி அதற்கான வேதனைத்தையும் வழங்க வேண்டும் என்று கூறினார் .

நிரந்தர நியமனம் என்ற எமது கோரிக்கையை அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்கள்.

 ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் ஜனாதிபதி கல்வி அமைச்சர் மற்றும் ஆளுநருக்கான மகஜரை கிழக்கு மாகாண முன்பள்ளி வாரியத்திடம் ஒப்படைத்துவிட்டு கலைந்தார்கள்..



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours