தமிழ் சமூகத்துக்கும்  முஸ்லிம் சமூகத்துக்கும் இடையிலான உறவின் இணைப்புப் பாலமாக விளங்கிய மூத்த அரசியல் ஆளுமை இரா. சம்பந்தன் அவர்களின் மறைவு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்திருக்கிறது என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான  ரவூப் ஹக்கீம், முதுபெரும் தமிழ் அரசியல் தலைவர் சம்பந்தன் அவர்களின்  மறைவையிட்டு  வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தனது அனுதாபச் செய்தியில்  மேலும் தெரிவித்திருப்பதாவது ; 

இலங்கையில்  புரையோடிப் போயுள்ள தேசிய இனப் பிரச்சினையில் குறிப்பாக தமிழ் மக்களுக்கும் பொதுவாக சிறுபான்மைச் சமூகங்களுக்கும் உச்சபட்ச அரசியல்  தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக  தனது வாழ்நாள் பூராவும்  அயராது பாடுபட்ட அரசியல் ஆளுமையான சம்பந்தன் அவர்களின்  மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைந்தேன்.

தந்தை செல்வாவின் அரசியல் பாசறையில் வளர்ந்து, இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடாக பாராளுமன்றத்தில் பிரவேசித்து, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் திருகோணமலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 2001 ஆம் ஆண்டிலிருந்து அண்மை காலம் வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகத் திகழ்ந்து, அது தோற்றம் பெற்றதிலிருந்து அதனை சிறப்பாக இருந்து வழி நடத்திய ஆளுமையாக இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் வரலாற்றில் இடம் பெறுகிறார்.

மாறிமாறி ஆட்சிக்கு வந்த தென்னிலங்கை பேரினவாத அரசியல் தலைமைகள் வழங்கி வந்த "நிறைவேறாத" வாக்குறுதிகளை மையப்படுத்தியதாக அவரது வாதங்கள் பாராளுமன்றத்தின் உள்ளும், புறமும் ஆணித்தரமாகவும் ஆக்ரோஷமாகவும் ஓங்கி ஒலித்ததால் பேரினவாத சக்திகளுக்கு சம்பந்தன் அவர்கள் சிம்ம சொப்பனமாகத் தோற்றமளித்தார்.

தந்தை செல்வாவின் காலத்தில் இருந்து மரபு ரீதியாக பின்பற்றப்பட்டு வந்த தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான  சாத்வீகப் போராட்டம் பின்னர் நாளடைவில் மாற்றமடைந்த அரசியல் சூழ்நிலைகள் காரணமாக  திசை மாறிய போதிலும் கூட, அரசாங்கத்துக்கும் விடுதலை  புலிகள் இயக்கத்துக்கும்  இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளை தமிழர் தரப்புகளுக்கும் சிறுபான்மையினருக்கும் ஏற்புடையதான விதத்தில்  கருத்தொருமைப்பாட்டைகாணும் நோக்குடன் முன்னெடுப்பதில்  சம்பந்தன் ஐயா நாட்டம் கொண்டிருந்தார். பாராளுமன்றத்தில் எதிர்கட்சித்  தலைவராகவும் அவர் இருந்திருக்கின்றார்.

வடக்கு, கிழக்கு  மாகாணங்களின்  இணைப்பு  அங்கு வாழும் முஸ்லிம்களின் இணக்கப்பாடு இன்றி    சாத்தியமாகிவிடாது என்பதில் சம்பந்தன் ஐயா மிகுந்த உறுதியாக  இருந்து வந்தார். அதனை அவர் தனது சொல்லிலும் செயலிலும் தெளிவாக வெளிக்காட்டினார். தமிழ் சமூகத்துக்கும்  முஸ்லிம் சமூகத்துக்கும் இடையிலான உறவின் ஆழ அகலங்களையும், ஏற்ற இறக்கங்களையும் அவர் நன்றாக அறிந்து வைத்திருந்தார்.

1977 இல் இருந்து வெவ்வேறு காலப்பகுதிகளில் திருகோணமலை மாவட்டத்தைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய சம்பந்தன் அவர்கள், பின்னர் 2000 ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இறுதி மூச்சு வரை தனது பங்களிப்பை பயனுறுதியுடைய முறையில வழங்கி  தமிழரசு கட்சி கடைபிடித்து வந்த கோட்பாடுகளுக்கு அமைய கச்சிதமாகப்  பேணிப் பாதுகாத்து வந்தார். 


பிற்காலத்தில் முதிர்ந்த வயதில் உடல்நிலை தளர்ந்திருந்த போதிலும்,  சக்கர நாற்காலியில்  பாராளுமன்றத்திற்கு  வருகை தந்த போதிலும் கூட, அவரது ஆற்றோட்டமான பேச்சாற்றல் அருகியிருக்கவில்லை.  

எல்லாவற்றிற்கும் மேலாக அவரது நினைவாற்றல் மெச்சத்தக்கது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் அணுகப்பட்ட விதம் குறித்தும், அதன் ஒவ்வொரு படிமுறை  குறித்தும் சுட்டிக்காட்டி விலாவாரியாக அவற்றிற்கு விளக்கமளிக்கும் அளவுக்கு அவரது ஞாபக சக்தி இருந்திருக்கிறது.

நாட்டில்  இக்கட்டான சூழ்நிலையில், மிகவும்  முக்கியமான காலகட்டத்தில் அவரது இழப்பு நேர்ந்திருப்பது வருந்தத் தக்கதாயினும், அவருக்குச் செலுத்தக்கூடிய நன்றி கடன் இனப் பிரச்சினைக்கான தீர்வில் தமிழ் மக்களும், தமிழ் பேசும் மக்கள் உள்ளடங்கிய சிறுபான்மையினரும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன்  பேச்சு வார்த்தைகளில்  ஈடுபடும் போது  குறைந்தபட்ச சேதாரங்களோடு அவசியமான விட்டுக்கொடுப்புகளை ஒவ்வொரு தரப்பும் செய்து நாட்டில் நிலையான சமாதானத்தை நிலை நாட்டுவதற்கு பாடுபடுவதாகும். 

அன்னாரின் பிரிவுத் துயரால் வருந்தும் குடும்பத்தினருக்கும் திருகோணமலை மக்களுக்கும்  தமிழரசுக் கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும்  ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours