(எம்.எஸ்.எம். ஸாகிர்)


சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்திற்கு கல்முனை Shinning Stars அமைப்பினால் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக  2 கணினிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

கணனிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு அதிபர் எம். எஸ்.எம். ஆரிப் தலைமையில் (26) இன்று திங்கட்கிழமை காலை ஆராதனையின் போது இடம்பெற்றது.

இந் நிகழ்வில், Shinning Stars அமைப்பின் சார்பாக அதன் ஸ்தாபகத் தலைவி திருமதி பஸீரா றியாஸ் மற்றும் அதன் உறுப்பினர்களான திருமதி றிஸ்னா சுபைர் மற்றும் திருமதி பெரோஷா காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டு கணனிகளை வழங்கி வைத்தனர்.

சிறுவர்களுக்கான கல்வி, பெண்கள் அபிவிருத்தித் திட்டம், ஜனாஸா நல்லடக்கத்தில் உதவி போன்றவற்றில் தங்களது பங்களிப்பை வழங்குவது  குறித்த அமைப்பின் மிக முக்கிய சேவைகளாக இருந்து வருகிறது. அத்துடன் ஏனைய பல சேவைகளையும் Shinning Stars அமைப்பு செய்து வருகிறது.

சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் ICT பாடத்தை கற்கும் மாணவர்கள் தரம் 1 தொடக்கம் 9  ஆம் தரம் வரை மாணவர்கள் இருந்தும் இங்கு கணினி ஆய்வுகூடமோ, கணனி அறைகளோ, கணனிகளோ இல்லாத மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. 

அதனையிட்டு பாடசாலையின் பிரதி அதிபர்  எம்.எச்.யூ. றினூபா குறித்த அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் 2 கணினிகளை பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்தனர்.

இங்கு உரையாற்றிய திருமதி பஸீரா றியாஸ், மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் இப்பாடசாலைக்கு நல்லுள்ளம் படைத்தவர்கள் இதுபோன்று இன்னும் பல உதவிகளைச்  செய்ய முன் வர வேண்டும் என்றும் இம் மாணவர்களின் கல்வியின் நலனில் அதிக அக்கறை கொண்டு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இவ்வுதவியை வழங்கிய அமைப்பின் ஸ்தாபகத் தலைவி பஸீரா றியாஸ் உட்பட அமைப்பின் உறுப்பினர்களுக்கு பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.ஆரிப் மற்றும் பாடசாலை சமூகத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

திருமதி பஸீரா றியாஸ் மற்றும் திருமதி தஸ்னீம் காரியப்பர் ஆகியோர் குறித்த அமைப்பின் ஸ்தாபர்களாகச் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours