(அஸ்லம் எஸ்.மெளலானா)

கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள பொது நூலகங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அவற்றை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ், சம்மந்தம்பட்ட உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கல்முனை மாநகர பொது நூலகங்களில் நிலவும் குறைபாடுகளை ஆராயும் கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை (08) மாநகர சபை கூட்ட மண்டபத்தில் ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது மற்றும் நற்பிட்டிமுனை பொது நூலகங்களில் நிலவி வருகின்ற குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பாக நூலகர்கள் மற்றும் நூலகப் பணியாளர்களிடம் கேட்டறிந்து கொண்ட ஆணையாளர், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நூலகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய விசேட வேலைத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

இந்நிலையில் நூலகங்களின் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கும் தேவைகளை பூர்த்தி செய்வதற்குமான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், களஞ்சியக் காப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கினார்.

அத்துடன் போதிய வசதிகள், ஆளணிகள் இருந்தும் சில நூலகங்களின் செயற்பாடுகள் தொடர்பாக வாசகர்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதால் நூலகர்கள் மற்றும் நூலகப் பணியாளர்கள் தமது பொறுப்புகளையும் கடமைகளையும் உதாசீனம் செய்யாமல், முறையாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஆணையாளர், தவறிழைக்கும் பணியாளர்கள் மீது எவ்வித தயவுமின்றி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன், விடய உத்தியோகத்தர் ஏ.ஆர். நஸ்ரின் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours