(சுமன்)
தமிழரசின்
மத்தியகுழு சஜித் பிறேமதாசா அவர்களை ஆதரிப்பதென்ற முடிவு எடுத்துள்ளதாக
அறிவித்துள்ளமை தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை சற்று பாதிப்புறச்
செய்தாலும் மக்கள் அதற்குரிய பதிலை வழங்குவர்கள். இந்;த வாரம் ஜனாதிபதித்
தேர்தலுக்குரிய தபால் மூல வாக்களிப்பு வாரமாக இருக்கின்றது. எனவே தபால் மூல
தமிழ் வாக்காளர்கள் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்திலே உறுதியாக
இருந்து சங்குச் சின்னத்திற்கு வாக்களித்து எமது ஒற்றுமையினைக் காட்ட
வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,
தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)
தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக
சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தல்
எதிர்வரும் 21ம் திகதி நடைபெற இருக்கின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி
முறைமை கொண்டு வரப்பட்டு இது 09வது ஜனாதிபதித் தேர்தல். கடந்த எட்டு
ஜனாதிபதித் தேர்தல்களிலும் அறுவர் ஜனாதிபதிகளாகத் தெரிவு
செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில் எமது ஆதரவோடு வந்தவர்களும்
இருக்கின்றார்கள், எமது ஆதரவில்லாமல் வந்தவர்களும் இருக்கின்றார்கள்.
அந்த
வகையில் வருகை தந்தவர்கள் அனைவரும் இந்த நாட்டில் தமிழ் மக்களைத்
தொடர்ச்சியாக இரண்டாந்தரப் பிரஜைகளாகவே நடத்திக் கொண்டு வந்தவர்கள்.
புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு எவருமே நிரந்தரத் தீர்வைத் தரவில்லை
என்ற காரணத்தினால் இந்த முறை ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்த
வேண்டும். எங்களுடைய மக்களது புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கான தீர்வு
இன்னும் கிடைக்கவில்லை என்பதை நாங்கள் ஒறறுமையாக நிரூபித்துக் காட்ட
வேண்டும்.
அது மட்டுமல்லாது 2009இன் பின்னர் தமிழ்க் கட்சிகள்
சிதறுண்ட நிலையிலே எமது அரசியல் பயணத்தைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்தப் பொது வேட்பாளரை அடையாளமாக வைத்து 2001லே தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு உருவாகியது போன்று ஒரு பலமான கூட்டணியை உருவாக்கி தமிழ்த்
தேசியப் பரப்பிலே பலமானதொரு குரல் ஒன்றாக 2004லே 22 உறுப்பினர்களை
வைத்திருந்ததைப் போல் பலமாகக் கொண்டு வர வேண்டும் என்ற காரணத்தை
மையப்படுத்தி தமிழ்ப் பொது வேட்பாளரை இறக்கியிருக்கின்றோம்.
அது
மாத்திரமல்ல இந்த 09வது ஜனாதிபத் தேர்தலென்பது இலங்கையில் ஒரு மாறுபட்ட
தேர்தலாக இருக்கின்றது. கடந்த எட்டு தேர்தல்களுமே இருமுனைப் போட்டிகளாகவே
இருந்தன. ஆனால் தற்போது 39 வேட்பாளர் இந்த ஜனாதிபதித் தேர்தலில்
இருந்தாலும் பிரதானமாக வெல்லக் கூடிய வேட்பாளர்களாக மூன்று பேர்
இருக்கின்றனர். அந்த அடிப்படையில் இந்தத் தேர்தல் மும்முனைப் போட்டியாக
இருக்கின்றது. இந்த நிலையில் நாங்கள் ஒரு பலமான அணியாக உருவாகினால் எங்களது
வாக்குகள் அவர்களுக்கு நிச்சயமாக 50 வீதத்தைத் தாண்டுவதற்குத்
தேவைப்படும். எங்களது வாக்குகள் இல்லாமல் எவருமே இந்தத் தேர்தலில் 50
வீதத்தைத் தாண்டுவதற்குரிய வாய்ப்புகள் இருக்காது. இந்த வேளையில் நாங்கள்
பலமான ஓரணியாக இருப்போமானால் எங்களைத் தேடி அந்த வேட்பாளர்கள் வரும்போது
நாங்கள் எங்களுடைய ஆகக் கூடிய கோரிக்கையை முன்வைத்து அதனை நிறைவேற்றலாம்
என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருந்தது.
ஆனால் தற்போதும் அந்தச்
சந்தர்ப்பம் இல்லாமல் இல்லை. இருந்தும் இந்;த வாரம் ஜனாதிபதித்
தேர்தலுக்குரிய தபால் மூல வாக்களிப்பு வாரமாக இருக்கின்றது. எனவே நாங்கள்
தமிழ் மக்கள் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்திலே உறுதியாக இருந்து
சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்பதற்குத் தயாராக வேண்டும்.
சங்குச்
சின்னத்திற்கு வாக்களிப்பதிலே கூடுதலான அக்கறை எங்களுடைய தபால் மூல
வாக்காளர்கள் காட்டுகின்ற போது அதையொட்டியதாகவே பொது வாக்கெடுப்பும்
அமையும் என இந்த ஜனாதிபதி வேட்பாளர்கள் நினைப்பதற்கு வழி செய்வோமானால்
எங்களை அவர்கள் நாடி வரும் சந்தர்;ப்பம் அதிகமாக இருக்கும். எனவே எமது
தபால் மூல வாக்காளர் தங்கள் வாக்குகளை சங்குச் சின்னத்திற்கு வழங்கி எமது
ஒற்றுமையினைக் காட்ட வேண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
பொது
வேட்பாளர் என்ற விடயம் ஆரம்பிக்கும் போது ஜனநாயகத் தமிழ்த் தேசியக்
கூட்டணி ஒரு முடிவினை எடுத்திருந்தோம். எமது கருத்துக்களின் அடிப்படையில்
ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.
இந்த விடயம் வெற்றியளிக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும்
அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இதில் இணைந்து வரவேண்டும் எனக் கேட்டுக்
கொண்டோம். இந்த விடயத்தை சிவில் சமூக மட்ட அமைப்புகளும் ஏற்றுக்கொண்டு
எங்களுடன் இணைந்திருந்தார்கள். அந்த நேரத்திலே இவ்வமைப்புகள் எமது ஜனநாயகத்
தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஒரு உத்தரவாதத்தை அளித்திருந்தார்கள். இந்தப்
பொது வேட்பாளர் என்ற விடயத்திற்குள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினை
நாங்கள் அழைத்து வருவோம் என்று கூறியிருந்தார்கள். ஆனால் இறுதியிலே
தமிழரசுக் கட்சிக்குள் இரண்ட வேறுபட்ட கருத்துகள் வெளிக் கொணரப்பட்டன.
இருந்தாலும் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழரசின் மத்தியகுழுக் கூட்டத்திலே
சஜித் பிறேமதாசா அவர்களை ஆதரிப்பதென்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே இந்தத் தமிழ் பொது வேட்பாளர்
என்கின்ற விடயத்தை சற்று பாதிப்படைய வைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து
இல்லை என்றாலும், அவர்களின் முடிவு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படும்
போது மக்கள் அதற்குரிய பதிலை வழங்குவர்கள் என்று தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours