நூருல் ஹுதா உமர்



காரைதீவு - மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போகியிருந்த நிலையில் நேற்று மாலை மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு மற்றும் பாதுகாப்பு படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது 5 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.

இருள் இரவு சூழ்ந்திருந்த போதிலும் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பு, மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு, காரைதீவு சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் தேடுதல் நடவடிக்கை இன்று காலையும் தொடர்ந்தும் இடம்பெற்று வந்தது. அதன்போது இரண்டு ஜனாஸாக்கள் மீட்புப்பணியாளர்களினால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மாணவர் பாரூக் முஹம்மட் நாஸிக் (15வயது) என்ற மாணவரும், இன்னுமொரு அடையாளம் தெரியாத ஒருவரின் ஜனாஸாவும் மீட்கப்பட்டது. மீட்புப்பணியாளர்களினால் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தொடர்ந்தும் தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

மத்ரஸா முடிந்து மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இந்த விபத்து நடைபெற்றுள்ளது. மீட்பு பணியின் போது விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும், உழவு இயந்திரமும் மீட்கப்பட்டதுடன் இதில் பயணித்தவர்கள் எத்தனை பேர் எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்பதை துல்லியமாக கூறமுடியாத நிலை உள்ளதாகவும், குறைந்தது இன்னும் 05 பேராவது வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றிருக்கலாம் என்று அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று காலை அம்பாறை அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், காரைதீவு மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர்கள், கல்முனை மாநகர ஆணையாளர், கணக்காளர், காரைதீவு பிரதேச சபை செயலாளர், பாதுகாப்பு படை உயரதிகாரிகள், பொலிஸார் எனப்பலரும் இங்கு விஜயம் செய்து துரிதல் கதியில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஸ்தலத்துக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. தாஹீர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடலினை மேற்கொண்டதுடன் குறித்த மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours