(பாறுக் ஷிஹான்)

கடலரிப்பு காரணமாக   கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல்   எல்லைச் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.

அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட நிலைமையை தொடர்ந்து கடலரிப்பின் தாக்கம் மிக வேகமாக இப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கரையோரம் பேணல் திணைக்களம்  அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் அவசர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென பள்ளிவாசல் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல்  பின்புறமாக அமைக்கப்பட்ட தென்னந்தோட்டமும் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன.அங்குள்ள சில தென்னை மரங்களும்  முறிந்து விழுந்துள்ளன.இது தவிர அடிக்கடி  தற்போது கடல் அலை சீற்றம் காரணமாக  இப்பகுதிகள் கடலரிப்பிற்குள்ளாகி பாரிய சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.காலை முதல் மாலை வரை மப்பும் மந்தாரமுமாக அடை  மழை இப்பகுதியில்  பெய்த வண்ணம் உள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் குறிப்பாக கல்முனை   பெரியநீலாவணை  சாய்ந்தமருது  மருதமுனை   பாண்டிருப்பு  அட்டாளைச்சேனை   நிந்தவூர்   ஒலுவில்   போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு  காற்றின் திசை மாற்றம்   நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம்   கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடலரிப்பு மிக கோரமாக காணப்படுகின்றது.

குறிப்பாக இவ்வாறான காலநிலை மாற்றங்களினால் கடலரிப்பு  அதிகமாக ஏற்படுவதினாலும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும்  வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours