(எஸ்.அஷ்ரப்கான்)



ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் மீன்களை கடலில் வைத்தே திருடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து அம்பாரை மாவட்ட  மீனவர்கள் சாய்ந்தமருது மருதூர் சதுக்கத்தில்  ஒன்றுகூடி கோரிக்கை விடுத்தனர். 

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஆழ்கடல் மீனவர் சங்கங்கள், மீனவர் சமாசங்கள், மீனவர் சம்மேளனங்கள், மீனவர்கள் போன்றோர் இணைந்து சாய்ந்தமருதில் இன்று (10) மாலை நடத்திய மீன் திருட்டை ஒழிப்பது தொடர்பிலான ஒன்று கூடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மீனவர்கள், 

பாதுகாப்பு படையினரும் இந்த ஈனச்செயலுக்கு உடந்தையாக இருப்பதுவும், ஆழ்கடலில் இயற்கையுடன் போராடி அன்றாட வாழ்வாதரத்தை கொண்டு செல்ல மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாட்டை இனியும் அனுமதிக்க முடியாது.

சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் இலகுவாக தப்பிவிட முடியாது. இலங்கை கடற்படை, விசேட அதிரடி படை, பொலிஸாரின் கூட்டு முயற்சியில் இந்த திருட்டு நடவடிக்கைகளை ஒழிக்க விசேட திட்டத்தை செயற்படுத்தி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர உறுதியளிப்பதாக பலரும் தெரிவிக்கிறார்கள்.ஆனால் அவை நடந்த பாடில்லை. பாராளுமன்றத்திலும் கடந்த காலங்களில் எங்களின் பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளது. 

நாங்களும் கடந்த காலங்களில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் எனப்பலரிடமும் பேசியும், கலந்துரையாடியும் எவ்வித ஆக்கபூர்வமான தீர்வும் கிட்டவில்லை. 

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம், தேற்றாத்த்தீவு உட்பட அதை அண்டிய பிரதேசங்களிலையே ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் திருட்டு போகிறது. 40 (மணிக்கு 40 கிலோமீட்டர்) குதிரை வேகம் கொண்ட சிறியரக மீன்பிடி படகுகளை கொண்டே இந்த திருட்டு சம்பவங்கள் நடாத்தப்பட்டு வருகிறது. மீன்களுடன் சேர்த்து மீன்பிடி வலைகளையும் வெட்டி எடுத்து செல்வதால் எங்களுக்கு பலத்த நஷ்டங்களும், கஷ்டங்களும் ஏற்படுகிறது. எங்களின் உயிருக்கும் உத்தரவாதமில்லை. பலத்த அச்சுறுத்தலை நாங்கள் தினம் தினம் எதிர்கொள்கிறோம்.

எனவே, எங்களின் குரல் உரியவர்கள் காதுக்கு சென்று எங்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது போனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்வதுடன் மிகப்பெரிய எதிர்ப்பு நடவடிக்கையையும், தொழிற்சங்க போராட்டத்தையும் முன்னெடுப்போம் என்றனர்.

இந்த கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாபா, காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.பர்ஹான், சாய்ந்தமருது வர்த்தக சங்க தலைவர் எம்.எஸ்.எம். முபாரக் உட்பட மீனவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பாரிய பிரச்சினையாகிய இந்த விடயத்தை உரிய அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பேசி,  அதற்கான தீர்வினை பெற்று தருவதாக இங்கு குறிப்பிட்டார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours