(  வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு, ஆலையடிவேம்பு , நாவிதன்வெளி, பொத்துவில் ஆகிய நான்கு பிரதேச சபைகளில்  ஆட்சி அமைப்பதற்கான இறுதிக்கட்ட உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் இன்று இங்கு விஜயம் செய்ய விருக்கும் எமது கட்சியின் தலைவர் சிவஞானம் மற்றும் செயலாளர் சுமந்திரனிடம் இதனை சமர்ப்பித்து கலந்துரையாடி இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் தொகுதி அமைப்பாளருமான கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார் .

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி அமைப்பு மற்றும் தவிசாளர், உப தவிசாளர், பட்டியல் உறுப்பினர்கள் தேர்வுகள் எந்தக் கட்டத்தில்  உள்ளன? என்ற கேட்டபோது அவர் மேற்கண்டவாறு பதில் அளித்தார் ..

அவர் மேலும் தெரிவிக்கையில் ..

காரைதீவு பிரதேச சபையில் எமது தமிழரசு கட்சியுடன் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸுடன்  இணைந்து ஆட்சி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது .
அதுபோல பொத்துவில் பிரதேச சபையிலும் முஸ்லிம் காங்கிரஸ் உடன் எமது கட்சி இணைந்து ஆட்சி அமைக்க உடன்பாடு எட்டப்பட்டிருக்கின்றது.
 
நாவிதன்வெளி மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபைகளில் எமது தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க அங்குள்ள சுயேட்சை குழு இணக்கம்  தெரிவித்து இருக்கின்றன .

எனவே, இந்த நான்கு இடங்களிலும் ஆட்சியமைப்பதற்கான இறுதி முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றன.

 தவிசாளர் உபதவிசாளர் தெரிவு;

காரைதீவு பிரதேச சபையில் தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும் ,மு.கா உறுப்பினர் உப தவிசாளராகவும் தெரிவதற்கு இணக்கம் காணப்பட்டது.

 எமது இலங்கை தமிழரசுக்கட்சியின் காரைதீவு பிரதேசக் கிளை 
சேர்ந்து தவிசாளர் தெரிவு தொடர்பாக, தெரிவான  வேட்பாளர்கள் உறுப்பினர்கள் மற்றும் கிளைக்குழு உறுப்பினர்கள் இணைந்து கலந்துரையாடி முடிவெடுத்து நேற்று எங்களுக்கு அறிவித்துள்ளது .

அதன்படி அங்கு கூடுதல் வாக்குகளைப்  பெற்ற  முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறிலை தெரிவுசெய்ய பெரும்பான்மையாக முடிவெடுத்திருக்கிறார்கள் .

ஆலையடிவேம்பில் முதல் இரண்டு வருடங்கள் எமது கட்சியின் உறுப்பினர்  தவிசாளராக இருப்பார், உப தவிசாளராக சுயேட்சை அணியின் தலைவர் இருப்பார் . அவரை எமது கட்சிக்குள் உள்வாங்கிக் கொண்டு அடுத்த இரண்டு வருட காலத்தில் அவர் தவிசாளராக கடமை ஆற்றுவார் .எமது கட்சியைச் சேர்ந்தவர் உபதவிசாளராக கடமை ஆற்றுவார் .

நாவிதன்வெளி பிரதேச சபையில் எமது உறுப்பினர் தவிசாளராகவும் 
சுயேச்சை அணியின் தலைவர் உப தவிசாளராகவும்  கடமை ஆற்றுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டிருக்கின்றது .

பொத்துவில் பிரதேச சபையில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தவிசாளராகவும்,  எமது உறுப்பினர் உபதவிசாளராகவும் இயங்குவதற்கு உடன்பாடு. எட்டப்பட்டிருக்கின்றது. 

எது எவ்வாறு இருப்பினும் இந்த உடன்பாடுகள் இன்று இங்கு விஜயம் செய்ய உள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் செயலாளர். சுமந்திரன் ஆகியோரிடம் கலந்துரையாடிய பின்பே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours