(க.விஜயரெத்தினம்)


கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 332 கவிஞர்களின் தூய்மையான கரங்களால் வடித்தெடுக்கப்பட்ட 
"கிழக்கின் கவிக்கோர்வை" தொகுப்புநூல் அறிமுக விழா கல்முனையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியீட்டு வைக்கப்பட்ட "கிழக்கின் கவிக்கோர்வை" தொகுப்பு நூல் அறிமுக விழா இன்று செவ்வாய்க்கிழமை (10)காலை 9.00 மணியளவில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரும்,முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருமான சரவணமுத்து நவநீதன் தலைமையில் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போது அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்றதுடன்,மங்கள விளக்கேற்றல்,இறைவணக்கம்,தலைமையுரை,அதிதிகள் உரை,நூல் அறிமுகவிழா என்பன இடம்பெற்றது.


இந்நூல் அறிமுக விழாவுக்கு கல்வி உயர்கல்வி அமைச்சின் கொள்கை திட்டமிடல் மற்றும் செயல்திறன் மீளாய்வு மேலதிகச்செயலாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் பிரதம அதிதியாகவும்,கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ்,கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் இளங்குமுதன்,சிரேஸ்ட எழுத்தாளர்களான உமா வரதராஜன்,கவிஞர் சோலைக்கிளி,மொழித்துறை விரிவுரையாளர் அப்துல் ரசாக் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,அரச உயரதிகாரிகள்,புத்திஜீவிகள் கலந்து கொண்டார்கள்.


இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் இருந்து பெருமளவான கவிஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டது ஒரு சிறப்பம்சமாக அமைந்தது. “கிழக்கின் கவிக்கோர்வை” எனும் கவிதை நூலிலே 332 கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கவிஞர்களது கவிதை படைப்புகள் உள்ளடங்கிய ஒரு நூலாக இது அமைய பெற்றிருப்பதும் வரலாற்றில் ஒரு புதிய நிகழ்வாக இதனை குறிப்பிடலாம்.கிழக்கு மாகாணத்தில் உருவான எல்லா கவிஞர்களது கவிதைகளையும் கோர்த்து அதனை புதுமை ஏற்படுத்தி இந்த மாகாணத்தின் புகழைப் பரப்பிட வேண்டும் என்ற ஆவாவில் ஆயிரம் கவிதைகளை ஆவது கொண்டதொரு தொகுப்பாக இதனை கோர்த்திடவே எமது கிழக்கு மாகாண பணிப்பாளரது முயற்சியும்,சிந்தனையும் இருந்தது.அதற்கான தேடல்கள் தொடர்ந்தாலும் கால நேரம் அந்த தேடலுக்கு ஒரு காற் புள்ளியை இட்டு இருக்கிறது.இருந்தாலும் 332 கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கவிஞர்களது கவிதை தொகுப்பை 642 பக்கங்களைக்கொண்டு  இன்றைய தினம் வெளியிட்டதில் கிழக்கு மாகாணம் பெருமை கொள்கின்றது.









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours