(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வொன்றில் கலந்துகொள்வதற்காக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையிலான இலங்கை பாராளுமன்றக் குழுவினர் சீன மக்கள் குடியரசுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
சீன மக்கள் குடியரசின் வணிக அமைச்சின் அனுசரணையுடன் சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கான சர்வதேச ஒத்துழைப்பு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த செயலமர்வு ஜூன் 20ஆம் திகதி முதல் ஜூலை 06ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.
இலங்கை சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் பிரதிநிதிகளான ஆளும் கட்சி எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு அமைந்துள்ளது.
இதில் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர் சுனில் குமார கமகே (குழுவின் தலைவர்), பாராளுமன்ற உறுப்பினர்களான சமன்மலி குணசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, (லெப்டினன்ட் கேணல்) (ஓய்வு) பிரகீத் மதுரங்க, அஜித் கிஹான், கிருஷ்ணன் கலைச்செல்வி, தினுந்து சமன் ஏக்கநாயக்க, (சட்டத்தரணி) பாக்ய சிறி ஹேரத், அபூபக்கர் ஆதம்பாவா, அசோக குணசேன, தனுர திசாநாயக்க ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
எதிர்க்கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான கின்ஸ் நெல்சன், பி.ஆரியவன்ச மற்றும் (சட்டத்தரணி) அநுராத ஜயரத்ன ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
பதவியணித் தலைமையதிகாரியும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, பாராளுமன்ற செயலகத்தின் சிரேஷ்ட பாராளுமன்ற ஒழுங்குமரபு உத்தியோகத்தர் ரணில் நாயணக்கார, சபை முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த முகாமைத்துவ சேவை அதிகாரி திலினி துஷாரிகா கமகே ஆகிய அதிகாரிகளும் இந்தக் குழுவில் உள்ளடங்கியுள்ளனர்.
இந்தச் செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜூன் 22ஆம் திகதி நடைபெற்றதுடன், இதில் சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சென் சுவாய், சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் மஜிந்த ஜயசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கடந்த 23ஆம் திகதி சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைத் தூதுக் குழுவினர், தேசிய மக்கள் காங்கிரஸின் வெளிவிவகாரக் குழுவின் பிரதித் தலைவரும், இலங்கை – சீன நட்புறவுக் குழுவின் பிரதித் தலைவருமான வங் கீ அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் காணப்படும் பரஸ்பர நட்புறவை மேலும் பலப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தத் தூதுக் குழுவினர் சீனாவில் தங்கியிருக்கும் காலத்தில் பெல்ட் அன்ட் ரூட் முயற்சியின் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, நகர்புற அபிவிருத்தித் திட்டங்கள், டிஜிட்டல் பொருளாதாரம், செயற்றை நுண்ணறிவின் மேம்பாடு, உலகளாவிய வலுசக்தி மாற்றம் மற்றும் கார்பன் வெளியேற்றத்தில் நடுநிலைமை வகித்தல் உள்ளிட்டவற்றில் சீனாவின் தேசிய நிலைமை குறித்த உள்ளக விபரங்களை அறிந்துகொள்வார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours