( வி.ரி. சகாதேவராஜா)

யாழ்ப்பாணம் செல்வச் சந்நதி ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஐந்து மாவட்டங்களை கடந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகைதந்த ஜெயாவேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு நேற்று(3) செவ்வாய்க்கிழமை காரைதீவில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த 34நாட்களாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய ஐந்து மாவட்டங்களைக் கடந்து நேற்று (3) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகள் பிறந்த காரைதீவிற்கு வருகைதந்த போது வழமைபோல் அடியார்களுக்கு மஞ்சள் நீரால் கால்கழுவி பெருவரவேற்பு அளிக்கப்பட்டது.

பாதயாத்திரை குழுவின் ஆலோசகர் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கி
.ஜெயசிறில், வழமைபோல் நீராகாரம் வழங்கிய முருகபக்தர் எஸ்.தேவதாஸ் குடும்பத்தினர் ஆகியோர் பெருவரவேற்பளித்தனர்.
உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்த இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரையின் மகிமை பற்றி பலரும் உரையாற்றினர்.

வேலுக்கு விசேட பூஜை நடைபெற்றது.

78 பாதயாத்திரீகர்கள் பங்கு பற்றும் இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம்- கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் பஜனை பாடி மகிழ்ந்தனர்.

இந்தியாவில் இருந்து ஜெகதீஸ்வரன் என்ற அடியாரும் , காலியில் இருந்து சஜித் என்ற சிங்கள அடியாரும் கலந்து கொண்டிருப்பது சிறப்பாக குறிப்பிடத்தக்கது.

பின்னர் அவர்கள்  காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தை தரிசித்து இரு தினங்கள் காரைதீவில்  தங்கியிருந்தனர்.

இன்று(5) வியாழக்கிழமை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் முழு நாளும் தங்கவுள்ளனர்.

எதிர்வரும் 18ஆம் தேதி உகந்தை மலையை அடைந்து 20ஆம் தேதி காட்டுப்பாதை திறக்கப்பட்டதும் முதல் நாள் காட்டுக்குள் பிரவேசிக்க இருக்கின்றார்கள்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours