உகந்தை மலை சுற்றுச் சூழலில் கடற்கரையோரம் உள்ள மலையொன்றில் புதிதாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை நிலையை ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மையினைக் கண்டறியும் முகமாக மட்டக்களப்பு தாயக செயலணி உறுப்பினர்கள் உள்ளிட்ட மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிவில் செயற்பாட்டாளர்கள் சிலர் இன்றைய தினம் உகந்தை மலை முருகன் ஆலயத்திற்கு விஜமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

உகந்தை மலை முருகன் ஆலய சுற்றுச் சூழலில் திடீரென புத்தர் சிலை நிர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அம்பாறை மாவட்ட சிவில் செயற்பாட்டாளர் த.பிரதீபன் அவர்களினால் வெளிக்கொணரப்பட்டதைத் தொடர்ந்து குறித்த விடயம் கிழக்கு மாகாணத்தின் பேசுபொருளாக அமைந்திருந்தது. இது தொடர்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் அவர்கள் உகந்தை மலை வளாகத்தில் எவ்வித புத்தசிலைகளும் வைக்கப்படவில்லை என்றவாறாக கருத்து வெளியிட்டிருந்தார்.

அந்த அடிப்படையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உண்மை நிலைமைகளை வெளிக்கொணரும் முகமாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தாயக செயலணியின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று இன்றைய தினம் இந்த களவிஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு தாயக செயலணியின் பிரதான ஒருங்கிணைப்பாளர் இருதயம் செல்வகுமார் தலைமையில் அம்பறை மாவட்ட சூழலியல் நீதிக்கான மக்கள் குரல் அமைப்பின் இணைப்பாளர் துரையப்பா காந்தன் உள்ளிட்ட குழுவினர் குறித்த களவிஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். 

உகந்தை முருகன் ஆலயத்திற்குச் சென்று அதன் முகாமையாளரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், சிலை அமைக்கப்பட்டிருந்த பிரதேசத்திற்குச் சென்று பார்வையிட்டிருந்தனர்.

குறித்த பிரதேசம் கடற்படையினரின் பூரணகட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால் மலையில் ஏறி புத்த சிலையைப் பரிசீலிக்கும், புகைப்படம் எடுக்கும் நிலைமைகள் அங்கு இருக்கவில்லை எனினும், குறித்த விடயம் தொடர்பில் குறித்த கடற்படை முகாம் அதிகாரி ஒருவருடனும் உத்தியோகப்பற்றற்ற முறையில் சிறு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த விடயத்தினை உகந்தை மலைக்கு வருகை தந்திருக்கும் கதிர்காம யாத்திரிகர்களுடன் கலந்துரையாடும் முகமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த அடிப்படையில் பல ஆண்டு காலமாக பாதயாத்திரை மேற்கொள்ளும் அடியவர்கள் சிலரிடமும் வினவப்பட்டது. இதன்போது அவர்கள் இவ்வருடமே தாங்கள் இந்த புத்த சிலையை இங்கு காண்பதாகவும் இதற்கு முன்பு நாங்கள் பல தடவைகள் இந்த பாதயாத்திரை மேற்கொண்டு இங்கு வந்துள்ளோம் ஆனால் இவ்வாறு எந்த சிலைகளும் இங்கு இருக்கவில்லை என்று அவர்களால் தெரிவிக்கப்பட்டன.

பின்னர் இங்கு பல வருட காலமாக தொழில் முயற்சியில் ஈடுபடுபவர்கள், கடற்கரையில் வாடி அமைத்து மீன்பிடி தொழிலை மேற்கொள்பவர்களிடமும் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையடப்பட்டது. சுமார் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பே குறித்த சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதன் பின்னர் ஆலய வண்ணக்கரைச் சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது அது பலனளிக்காத நிலையில், ஆலயத்தின் முன்னாள் செயலாளர் பஞ்சாட்சரம் அவர்களைச் சந்தித்து இது தொடர்பான விபரங்கள் ஆலய வரலாற்று விடயங்கள் தொடர்பில் ஆவணங்களைச் சேகரிக்கும் பணிகளை முன்னெடுத்திருந்தனர். 

இந்த நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ள குழுவினர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமான கலந்துரையாடல்களினூடாக இவ்வாறான மத ரீதியான சிதைப்புகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகக் குறித்த கள விஜயத்தினை மேற்கொண்டிருந்த குழுவினர் தெரிவித்தனர். 

இது தொடர்பில் அக்குழுவினர் மேலும் தெரிவிக்கையில்,

உகந்தை முருகன் ஆலயத்தில் வள்ளிமலையில் முருகன் சிலை வைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நிர்மானிப்பு வேலைகளை தொல்பொருள் திணைக்களம், வன இலாகா உள்ளிட்ட திணைக்களங்கள் தலையீடு செய்து தொல்பொருள் சிதைவுகள் ஏற்படும் எனக் கூறித் தடுத்து நிறுத்தியன. ஆனால் இவ்வாறான புத்த சிலைகள் அமைப்பதற்கு மாத்திரம் எவ்வித திணைக்களங்களும் தடை விதிப்பதில்லை. இது ஒரு மதசார்பான செயற்பாடாகவே இத்திணைக்களங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த கால அரசாங்கங்கள் போன்றே தற்போதைய இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் செயற்பட்டு வருகின்றமையானது அவர்களில் தேர்தல் கால செயற்பாடுகளுக்கும், தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாகவே இருக்கின்றன. இவை தொடர்பில் சிவில் செயற்பாட்டாளர்களாகிய எமது கண்டனத்தையும் இதன்போது வெளிப்படுத்துகின்றோம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours