இ.சுதாகரன்
களுதாவளை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை தடை செய்வது தொடர்பான கலந்துரையாடல்
மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களைத் தடைசெய்து அறநெறிக்கல்வியினை முன்னெடுத்தல் தொடர்பாக தனியார் கல்வி நிலையங்களை முன்னெடுக்கும் உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு சனிக்கிழமை காலை 11 மணியளவில் பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதித் தவிசாளர் அலையாப்போடி வசீகரன் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள்,தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது தனியார் கல்வி நிலையங்களின் பல செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிக்கல்வி தனியார் வகுப்புக்களினால் தடைப்படுவதாகவும் இதனைச் சீர்செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தவிசாளர் கோரிக்கையினை முன்வைத்தார். அதற்கு சாதகமான முடிவு கிடைக்கப்பெற்றதுடன் தனியார் கல்வி நிலையங்களில் அதிகளவான பணம் மாணவர்களிடமிருந்து அறவிடப்படுவதாகவும் இதனால் வறுமைக் கோட்டின் கீழ் கல்வியினை முன்னெடுக்கும் பல மாணவர்களின் கல்வி நடவெடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் இதனைத் தவிர்த்து குறைந்த பணத்தினை அறவிட நடவெடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டன.கோரிக்கையானது பல வாதப் பிரதிவாதங்களின் பின்னர் இணக்கப்பாடு எட்டப்பட்டன. ஒரு மணித்தியாலமும் முப்பது நிமிடத்திற்கு எண்பது ரூபாய் மாத்திரம் அறவிடுவதற்கு தீர்வு முன்வைக்கப்பட்டன.பிரதேசத்தில் பல தனியார் கல்வி நிலையங்கள் பதிவு செய்யப்படாமல் செயற்படுவதாகவும் அவை அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் அவ்வாறு பதிவு செய்யப்படாத கல்வி நிலையங்கள் தொடர்பாக சட்ட ரீதியான நடவெடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக தவிசாளர் சுட்டிக்காட்டினார்.தனியார் கல்வி நிலையங்களின் கல்விச் செயற்பாடுகளை மாலை ஆறு மணிக்கு முன்பாக நிறைவு செய்யுமாறு பணிக்கப்பட்டன கோரிக்கையானது ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.எதிர் வரும் காலங்களில் பிரதேசத்தில் ஆங்கில மொழி மூலமான முன்பள்ளி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதற்கான ஆசிரியர்கள் ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.முதலில் நூறு பேர் வட்டார உறுப்பினர்களின் உதவியுடன் தெரிவு செய்யப்படவுள்ளதாக தவிசாளர் தெரிவித்தார்.மேலும் எதிர் காலத்தில் பிரதேசத்தில் பொருட்களின் விலையினை போதுமான அளவு குறைத்து மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு நடவெடிக்கை முன்னெடுக்கப்படும் என வாக்குறுதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours