இந்து சமய கலாசார அலுவலர்கள் திணைக்களம் தலைமையில், இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்காக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் தேசிய ஆக்கத்திறன் விருது 2025ற்கான மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மட்ட போட்டி, இன்று பட்டிருப்பு தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வானது, இளைய தலைமுறையின் உள்ளார்ந்த ஆக்கபூர்வத்திறன்களையும், அறநெறி விழுமியங்களையும் மேம்படுத்தும் தொன்மைமிக்க முயற்சியாக திகழ்கிறது. கல்வி, கலை, ஆன்மீகம், அறநெறி போன்ற துறைகளில் மாணவர்கள் தங்கள் அறிவு, சிந்தனை, திறமைகளை திகழ்த்தினர்.
இந்நிகழ்வில், பிரபல நடிகை, ஹரிகதா பிரசங்க கலைஞர் மற்றும் ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முக சிறப்புக்களுடன் திகழும் செல்வி. றுத்றா அமிர்தரெத்தினம் அவர்கள் நடுவராக பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தன் ஆன்மீக அறிவுப் பார்வையால் மாணவர்களின் ஆற்றலை மதிப்பீடு செய்ததுடன், தனது முகநூல் பக்கத்தில் மாணவர்களின் ஆன்மீக விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வண்ணம் சிறு பதிவொன்றையும் இட்டுள்ளார் .
> “வேரறியா வளர்ச்சியே வானளாவும் மேம்பாட்டுக்கு அடித்தளம். இத்தகைய ஆக்கவள வாயில்கள், மாணவர்களின் உள்ளார்ந்த ஒளியை வெளிக்கொணரும் மேடை,” என அவரது பதிவு காணப்பட்டது.
திணைக்களத்தின் உயரதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்ற இந்நிகழ்வு, மாணவர்களின் மனச்சான்றை வளர்க்கும் ஒரு சின்னஞ்சிறு துவக்கமாகவும், கலாசார விழிப்புணர்வை ஊட்டும் ஒரு பெரும் பொன்னிழையாகவும் அமைந்தது

Post A Comment:
0 comments so far,add yours