( வி.ரி. சகாதேவராஜா)

சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய வீரச்சோலை  தமிழ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு அநேக புலமைப் பரிசில்களை "ஒஸ்கார்" அமைப்பினூடாக வழங்கவிருக்கிறேன். ஆகவே கவனமாக படியுங்கள்;பரிசுகளை வெல்லுங்கள்.

இவ்வாறு அங்கு நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய அவுஸ்திரேலிய "ஒஸ்கார்" பிரதிநிதி தம்பியப்பா கணேசநாதன் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), சம்மாந்துறை வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய வீரச்சோலை  தமிழ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"ஒஸ்கார்" ( AusKar) அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதனின் ( ராஜன்) வழிநடத்தலில்,  உபதலைவர், பிரபல கட்டடக் கலைஞர் அ.மகேந்திரன் ஒழுங்கமைப்பில், அவுஸ்திரேலியாவிலிருந்து விசேடமாக கலந்து கொண்ட "ஒஸ்கார்" அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர் தம்பியப்பா கணேசநாதன்  இத் திட்டத்திற்கு பூரண நிதியுதவி நல்கினார்.

இந்நிகழ்வு ,  வீரச்சோலை  தமிழ் மகாவித்தியாலயத்தில்   நேற்று ( 26)   செவ்வாய்க்கிழமை  அதிபர் ஆ.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக,  ஒஸ்கார் அமைப்பின் இலங்கைக்கான செயற்பாட்டுக்குழுத் தலைவர், ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளரும், பிரபல ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா  கலந்து சிறப்பித்தார்.
சிறப்பதிதியாக ஒஸ்கார் பிரதிநிதி காரைதீவு அனைத்து ஆலயங்களின் அறங்காவலர் ஒன்றியத் தலைவர் இரா.குணசிங்கம் கலந்துசிறப்பித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்.
இளமையில் வறுமை என்னவென்பதை நான் அறிவேன். எனவே இத்தகைய மிகவும் பின்தங்கிய பகுதியில் கல்விகற்கும் உங்களுக்கு என்னாலான முழு உதவியையும் செய்வேன் . கபொத. சா.தர மாணவர்கள் சிறப்பு சித்தி பெற்றால் பெறுமதியான புலமைப் பரிசில் வழங்கப்படும். அதேபோல் ஏனைய மாணவர்கள் பாடங்களில் 100 புள்ளிகளை பெறுகின்றபோதும் புலமைப் பரிசில் வழங்கப்படும்.இங்கு சிரமத்திற்கு மத்தியில் வந்து கற்பிக்கின்ற அதிபர் ஆசிரியர்களையும் பாராட்டுகின்றேன். என்றார்.

நிகழ்வில் 50 மாணவர்களுக்கு பாடசாலை பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள்  கலந்து கொண்டனர்.

"ஒஸ்கார்"  அமைப்பினர்  கடந்த 15 வருடங்களாக இன்னொரன்ன பல  சேவைகளை காரைதீவில் மட்டுமல்லாமல்,  அம்பாறை மாவட்ட தமிழ் கிராமங்களில்  செய்து வருகின்றார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதத்தில் இதுவரை திராய்க்கேணி, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி, வீரச்சோலை ஆகிய பாடசாலைகளில் கற்றல் உதவி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் நாவிதன்வெளி பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய குடியிருப்புமுனை சண்முகா பாடசாலைக்கும் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் கந்தசாமி பத்மநாதன் (ராஜன்) தெரிவித்தார்.

இவ் வருடம் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் மேலும் பெருமளவான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகவும் ஒஸ்கார் தலைவர் கந்தசாமி பத்மநாதன் ராஜன் மேலும் தெரிவித்தார்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours