( வி.ரி.சகாதேவராஜா)
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் களுவாஞ்சிகுடி  கிராம சமூக அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தின "சிறுவர் மகிழ்ச்சி கூடல்" நிகழ்வானது நேற்று முன்தினம்  பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் களுவாஞ்சிகுடி சமுத்திரபுரம் திறந்த வெளி திடலில் இடம்பெற்றது.

'உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள் ' எனும்  தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்படும் இவ் வருடத்திற்கான  சிறுவர் தின நிகழ்வில் சிறுவர்களுக்கான பல நிகழ்வுகள் பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் சிறுவர் மற்றும் மகளீர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது சிறுவர்களுக்கான வினோத  விளையாட்டுக்கள் மற்றும் கலந்துகொண்ட பொதுமக்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேச சிறுவர்கள்  பிரதம அதிதிகளாக கலந்துகொண்டிருந்த இந்த நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், இலங்கை நிர்வாக சேவையின் பயிற்சி உத்தியோத்தர், அலுவலக உத்தியோகத்தர்கள், களுவாஞ்சிகுடி  பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூர்த்தி சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந் நிகழ்வுகளானது பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களான  எம். புவிதரன் மற்றும் எஸ். சக்திநாயகம் ஆகியோரின் ஒருங்கிணைப்பின் கீழ் சிறுவர் மற்றும் மகளீர் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours