​(ரஞ்சன்)

​மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (12.02.2026)ஆம் திகதி மாவட்டத்தின் பல பாகங்களிலும் பரவலாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, பெரும்போக நெல் அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

குறிப்பாக போரதீவுப்பற்று மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய விவசாயப் பிரதேசங்களில் அறுவடைப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

நெல்லை உலர வைக்க முடியாமல் தவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக போரதீவுப்பற்று மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் தற்போது அறுவடை இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை செய்யப்பட்டு வருகின்றது. 

எனினும், இன்று (12.02.2026)ஆம் திகதி காலை முதல் பெய்து வரும் மழையினால் அறுவடை செய்த நெல்லை உலர வைக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

​வீதியோரங்களிலும் திறந்த வெளி மைதானங்களிலும் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் மழையில் நனைந்துள்ளதால், அவை முளைக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஈரப்பதன் அதிகமாக உள்ள நெல்லை நீண்ட காலம் களஞ்சியப்படுத்த முடியாது என்பதால், அதனை உடனடியாக விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். 

இதனைப் பயன்படுத்தி, தனியார் வியாபாரிகள் நெல்லின் விலையை மிகக் கடுமையாகக் குறைத்து கேட்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாதிக்கநட்ட ​விவசாயி ஒருவர் கூறுகையில்...

"பெருமளவு செலவு செய்து விளைவித்த நெல்லை, லாபத்தில் விற்பனை செய்ய முடியாமல் போயுள்ளது. மழையினால் நெல் ஈரமாக இருப்பதால், வியாபாரிகள் கேட்கும் அடிமட்ட விலைக்கு கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது," என்றார்.

விவசாயிகளின் கோரிக்கைஅறுவடை நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை அனர்த்தத்தினால் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள தமக்கு, அரசாங்கம் உடனடியாக நிவாரணங்களை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோருகின்றனர். குறிப்பாக, நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக ஈரமான நெல்லையும் நியாயமான விலைக்கு கொள்வனவு செய்ய மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours