மட்டக்களப்பு மாவட்ட எல்லை மாற்றம் குறித்த சர்ச்சை: போரதீவுப்பற்று கிராமங்களை அம்பாறையுடன் இணைக்கும் முயற்சி?பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி 
அவர் மேலும் கூறுகையில் 
மட்டக்களப்பு மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பாக கவலைக்கிடமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல், மட்டக்களப்பின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட கிராமப் பிரிவுகளுடன் இணைப்பதற்கான கூட்டம் நடைபெற்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

அக்கூட்டத்தில் மாவட்ட எல்லை நிர்ணயக் குழுவின் அங்கீகாரமும், சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக, இன்று (24.02.2026) நான் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் திரு. சோ. ரங்கநாதன் அவர்களை சந்திக்க பிரதேச செயலகத்திற்குச் சென்றேன். இச்சந்திப்பில் போரதீவுப்பற்று தவிசாளர் கௌரவ வி. மதிமேனன், பிரதேச சபை உறுப்பினர்கள் கௌரவ அ. பிறேமாகரன், கௌரவ ம. கோபிநாத், கௌரவ கா. யோகராசா மற்றும் கௌரவ தே. ஜேனுகா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக எந்தவித தகவலும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என பிரதேச செயலாளர் தெரிவித்தார். எல்லை நிர்ணயம் தொடர்பாக சில இடங்களில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறியிருந்தாலும், குறிப்பிட்ட கிராமங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தமக்குத் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படும் திட்டங்கள் பின்வருமாறு:

 மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட 25ஆம் கொலணி கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட குமாரிகம கிராமத்தையும் இணைத்து, “சமகிபுர” என்ற புதிய கிராமத்தை உருவாக்கி அம்பாறை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருதல்.

 மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ராணமடு கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட சுகதகம கிராமத்துடன் இணைத்தல்.

 மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெல்லாவெளி கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட கோணகல கிராமத்துடன் இணைத்தல்.

மேற்கண்ட மூன்று திட்டங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எல்லை நிர்ணய நடவடிக்கைகளின் மூலம் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை சிங்களர்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களுடன் இணைத்து, தமிழர் இருப்பை பலவீனப்படுத்தும் மறைமுக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours