பாறுக் ஷிஹான்- 



புனித நோன்பு காலங்களில் சாய்ந்தமருது பிரதேசத்தில்  தயிர் உற்பத்தி செய்து விற்பனை செய்தல் தொடர்பில் தொடர்ச்சியாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் தயிர் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.


பொது மக்களிடமிருந்து கிடைத்த தரமற்ற தயிர் தொடர்பான முறைப்பாட்டினைத் தொடர்ந்து இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது  சந்தேகத்திற்கிடமாக அடையாளம் காணப்பட்ட தயிர் விற்பனை நிலையத்திலிருந்து தயிர் மாதிரிகள் கைப்பற்றப்பட்டு மேலதிக பகுப்பாய்விற்காக அரசு ரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.


மேலும்  தயிர் உற்பத்தி செய்யப்பட்ட வெளிப் பிரதேச நிறுவனங்களின் சுகாதார நிலைமைகளை பரிசோதிப்பதற்காக அந்தந்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டது.

இது தவிர  சாய்ந்தமருது பிரதேசத்தில் அனுமதியின்றி வெளிப் பிரதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட தயிர்களை விற்பனை செய்தமை   சுகாதாரச் சான்றிதழ்கள் இன்றி  முறையற்ற லேபிள் ஒட்டியமை  மற்றும் பிற குறைபாடுகளுடன் விற்பனை செய்மை போன்ற செயற்பாடுகளை மேற்கொண்ட  விற்பனையாளர்கள் எச்சரிக்கப்பட்டு அவ்வகை செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு மற்றும் பிரதேசத்திலிருந்து அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.


மேற்குறித்த பரிசோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி   ஷகிலா இஸ்ஸதீன்  பணிப்புரைக்கமைய   சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்   ஜே. மதன்   தலைமையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள்  அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



  

--
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours