நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பகுதியில் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு மார்க்கக் கல்வி வகுப்புகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
2026 பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் 2026 மார்ச் 18 ஆம் திகதி வரை நடைபெற்ற மார்க்க சட்டம் (பிக்ஹ்), தஃப்சீர் மற்றும் தஜ்வீத் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்று பயனடைந்த 33 மாணவர்களுக்கு 18.03.2026 புதன்கிழமை சுபஹ் தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது ஹுதா பள்ளிவாசலில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் எம்.சீ. அப்துல் மஜீத் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், பள்ளிவாசலின் பேஷ் இமாம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளையின் செயலாளர் அஷ்ஷேய்க் அல் ஹாபிழ் நப்றாஸ் ஹனிபா (ரஹ்மானி) அவர்கள் நிகழ்வை நெறிப்படுத்தினார்.
மேலும், இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளையின் தலைவர் அஷ்ஷேய்க் எம்.எம். மீராஸாஹிப் சலீம் (ஷர்க்கி) மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளையின் தலைவர் அஷ்ஷேய்க் ஏ.எல்.எம். முர்ஷித் முப்தி (ஸஃதி, நஜ்மி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேவேளை, சிறப்பு அதிதிகளாக மௌலவி தாஸீம், மௌலவி சமீர், அல் ஹாபிழ் அப்துர் ரஹ்மான் உள்ளிட்டோர் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு மாணவர்களின் மார்க்க அறிவை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




Post A Comment:
0 comments so far,add yours