( வி.ரி.சகாதேவராஜா)

 அம்பாறை மாவட்டத்தின் காரைதீவில் வீரத்தமிழ்த்தாய் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் நேற்று இரவு அனுஷ்ட்டக்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும், முன்னாள் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருமான கி.ஜெயசிறில் ஏற்பாட்டில் நேற்று இரவு காரைதீவு கடற்கரை வளாகத்தில் இந் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழர் உரிமைக்காக அஹிம்சை வழியில் போராடி, உண்ணாவிரதம் மேற்கொண்டு தனது உயிரை அர்ப்பணித்த அன்னை பூபதியின் நினைவாக இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.

 1988ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலப்பகுதியில், பொதுமக்களின் பாதுகாப்பும் உரிமைகளும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

நிகழ்வில், சமூக ஆர்வலர்கள், பிரதேச மக்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு அன்னையின் உருவப்படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினர்.

 அன்னையின் தியாகத்தையும் அவரின் உறுதியான போராட்ட மனப்பாங்கையும் நினைவுகூரும் வகையில் அமைதியான சூழலில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

மேலும், நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் உரையாற்றி, அன்னை பூபதி அவர்கள் மேற்கொண்ட தியாகம் தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று என்றும், இன்றைய தலைமுறையினரும் அவரது போராட்ட மனப்பாங்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்நிகழ்வு சமூக ஒற்றுமையையும் தியாகிகளை நினைவுகூரும் பண்பையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours