(ரஞ்சன்)

மட்டக்களப்பு,போரதீவுப்பற்று,  விளாந்தோட்டம் வாவிஅடியில் வீற்றிருக்கும் ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நாளை (08.04.2026)ஆம் திகதி  பக்திப்பூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.

இதனை முன்னிட்டு பக்தர்களின் போக்குவரத்து வசதியினைக் கருத்திற்கொண்டு வீதிகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளன.

கும்பாபிஷேகக் காலங்களில் ஆலயத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் வாகனச் சாரதிகள், வீதிகள் குண்டும் குழியுமாக இருந்தமையால் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என அஞ்சப்பட்டது. 

இது குறித்து ஆலய நிருவாகத்தினர் மற்றும் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளினை போரதீவுப்பற்று பிரதேச சபை கவனத்தில் எடுத்துக்கொண்டது.

இதனடிப்படையில், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் அவர்களின் அனுமதியுடன், நேற்று (06.04.2026) போரதீவுப்பற்று பிரதேசசபையின்,பாலையடி வட்டார உப தவிசாளர் தங்கராசா கயசீலன் அவர்களின் நேரடி மேற்பார்வையில் விசேட வீதித் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மோட்டர் கிரன் (Motor Grader) கனரக வாகனத்தின் உதவியுடன் ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதிகள் மற்றும் உள்வீதிகள் அனைத்தும் சமப்படுத்தப்பட்டு செப்பனிடப்பட்டன.

இந்தத் துரித நடவடிக்கை காரணமாக, கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி பாதுகாப்பான முறையில் பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதேச சபையின் இப்பணிக்கு அப்பகுதி மக்கள் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours