(சபையிலிருந்து  வி.ரி.சகாதேவராஜா)

அறப்போர் நாயகி தியாகத் தாய் அன்னை பூபதிக்கு காரைதீவு பிரதேச சபை மாதாந்த அமர்வில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் நான்காவது சபையின் பத்தாவது அமர்வு இன்று (21)   செவ்வாய்க்கிழமை காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற போதே இவ் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

அவர் தலைமை உரையாற்றுகையில் தந்தை செல்வா மற்றும் அன்னை பூபதி தொடர்பாக உரையாற்றி மௌன அஞ்சலிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதனையேற்று அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் தவிசாளர் சு.பாஸ்கரன் மேலும் பேசுகையில்..

தமிழர் உரிமைக்காக அஹிம்சை வழியில் போராடி, உண்ணாவிரதம் மேற்கொண்டு தனது உயிரை அர்ப்பணித்த அன்னை பூபதி அவர்களின் நினைவாக இந்த நிகழ்வு செய்யப்பட்டது.

1988ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலப்பகுதியில், பொதுமக்களின் பாதுகாப்பும் உரிமைகளும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளது. எனவே அந்த வீரத்தாயை நாம் என்றும் நினைவுகூர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சபையில் உப தவிசாளர் எம்.எச்.எம்.இஸ்மாயில் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், மாகாண சபை நிதியிலிருந்து ஒவ்வொரு உறுப்பினருக்கும் வாழ்வாதார திட்டத்தை முன்னெடுப்பதற்காக தலா ஒரு லட்ச ரூபாய் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

சுமார் அரைமணி நேரத்தில் பத்தாவது அமர்வு நிறைவுற்றது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours