அபு அலா
குச்சவெளி பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், இரத்த சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரத்தை ஒரு மாத காலத்திற்குள் பெற்றுத்தருவதாக தெற்காசிய பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.எம்.முஜீப் உறுதியளித்துள்ளார்.
குச்சவெளி பிரதேசத்தில் வாழ்கின்ற சுமார் 17 ஆயிரம் மக்களின் சுகாதாரத் தேவைகளையும், குறிப்பாக சிறுநீரகக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு பல சிரமங்களுக்கு மத்தியில் தூர இடங்களுக்குச் சென்று இரத்த சுத்திகரிப்பு (Dialysis) செய்து வருகின்ற மற்றும் செய்ய முடியாது தவிக்கும் நோயாளிகளின் சிரமங்கள் தொடர்பில், குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாரக், தெற்காசிய பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.எம்.முஜீபிடம் விடுத்த விசேட வேண்டுகோளுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் குச்சவெளி வைத்தியசாலையில் இன்று (23) இடம்பெற்றது. இதன்போது குச்சவெளி பிரதேச வைத்தியசாலையின் ஏனைய பௌதீக வளக் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்தும் தவிசாளர் ஏ.முபாரக் மிக விரிவாக எடுத்துரைத்தார்.
இக்கலந்துரையாடலில் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் முஹம்மட் இர்பான் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.



Post A Comment:
0 comments so far,add yours