(ரஞ்சன்)

யானை மற்றும் வனவிலங்கு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கல்வி கற்று வரும் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மண்டூர் 35ஆம் கிராம கண்ணன் வித்தியாலயத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாரிய சிரமதானப் பணியொன்று நேற்று (10.05.2026) முன்னெடுக்கப்பட்டது.

​1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தினால் முற்றாக அழிக்கப்பட்டு, பின்னர் மக்களின் பெரும் முயற்சியால் மீளக் கட்டியெழுப்பப்பட்ட இந்தப் பாடசாலை, இன்று பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்,சிங்கள  எல்லைக் கிராமத்தில் அமைந்துள்ளதால், பாடசாலையைச் சூழவுள்ள அடர்ந்த பற்றைக்காடுகள் வனவிலங்குகளின் புகலிடமாக மாறியுள்ளன.

​குறிப்பாக, அண்மையில் யானை தாக்கியதில் பாடசாலையின் சமையலறை சேதமடைந்துள்ளது.

அத்துடன், குரங்குகள் மற்றும் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மாணவர்கள் விளையாடுவதற்கு அல்லது நிம்மதியாக கல்வி கற்பதற்கு அச்சப்படும் சூழல் நிலவுவதாகப் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பிரதேச சபையின் துரித நடவடிக்கை...

பாடசாலை சமூகம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன் அவர்களின் வழிகாட்டலில் இந்தச் சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

போரதீவுப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் த. கயசீலன் அவர்கள் நேரில் சமூகமளித்து இப்பணிகளைக் கண்காணித்தார்.

இதன்போது பிரதேச சபையின் கனரக வாகனங்கள் (JCB) பயன்படுத்தப்பட்டு,பாடசாலை,மற்றும்  மைதானத்தைச் சுற்றியிருந்த பாரிய பற்றைக்காடுகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தச் சிரமதானப் பணியின் போது கருத்துத் தெரிவித்த உபதவிசாளர் மற்றும் கிராம மக்கள்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த தமிழ்,சிங்கள எல்லைக் கிராமத்துப் பாடசாலையின் கல்வித் தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அனைத்து அரசியல்வாதிகளும், அரசாங்கமும் மேலதிக ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.குறிப்பாக வனவிலங்கு அச்சுறுத்தலில் இருந்து நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தனர்.

இந்தச் சிரமதானப் பணியானது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், நீண்ட காலத்திற்குப் பிறகு மாணவர்கள் அச்சமின்றி மைதானத்தைப் பயன்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours