(ரஞ்சன்)

மட்டக்களப்பு, திருப்பழுகாமம் "விறிலியன்ற்" (Brilliant) விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வருடாந்தம் நடத்தப்படும் மே தின கலாசார விளையாட்டு நிகழ்வுகள் இன்று (01.05.2026)ஆம் திகதி  கோலாகலமாக நடைபெற்றன.

இன்றைய தினத்தின் முதலாவது நிகழ்வாக காலை 7:00 மணிக்கு மரதன் ஓட்டப் போட்டி ஆரம்பமானது.

திருப்பழுகாமம் கண்ணன் சிலையடியில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில், போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி. மதிமேனன் அவர்கள் கலந்துகொண்டு போட்டியினை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

இந்த மரதன் ஓட்டமானது திருப்பழுகாமம் கிராமத்தினூடாக சென்று பிரதான வீதி வழியாக பெரியபோரதீவு, கோவில் போரதீவு எல்லை வீதி வரை சென்று, மீண்டும் அதே பாதையூடாகத் திரும்பி வந்து திருப்பழுகாமம் மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து,இரண்டாவது போட்டியாக மீனவர்களின் வாழ்வியலோடு இணைந்த பாரம்பரிய தோணி ஓட்டப் போட்டி முற்பகல் 9:00 மணியளவில் பழுகாமம் ஆத்துக்கட்டு பாலத்தில் ஆரம்பமானது. 

இதில் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும், சுறுசுறுப்புடனும் போட்டியிட்டுத் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வின் போது போரதீவுப்பற்று பிரதேசசபையின் பழுகாமம் வட்டார உறுப்பினர் சு.விக்கினேஸ்பரன்,ஓய்வுபெற்ற மாவட்ட பதிவாளர்

​அ. பேரின்பநாயகம்,

​மற்றும் விறிலியன்ற் விளையாட்டுக்கழக நிருவாகத்தினர், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

வருடா வருடம் இக்கழகத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த மே தின கலாசார விளையாட்டு விழா, இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours