((கனகராஜா சரவணன்)
மட்டக்களப்பில் விடுதியில் தீ பற்றி உயிரிழந்த இரு குழந்தைகள் தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவரை உயிரிழந்த பிள்ளைகளின் இறுதிக் கிரியைகளுக்காக பிணை வழங்கிய போதும் பிணை எடுக்க எவரும் இல்லாததையடுத்து அவரை எதிர்வரும் 12ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று திங்கட்கிழமை (1) உத்தரவிட்டார்
மட்டு திருகோணமலை வீதியில் உள்ள விடுதியின் அறையில் தங்கியிருந்த இரு குழந்தைகள் கடந்த மே 27 ம் திகதி புதன்கிழமை மாலையில் கட்டில் மெத்தை தீப்பற்றி எரிந்ததில் இரு குழந்தைகள் மூச்சு திணறி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் குழந்தைகளின் தாய்க்கு புற்றுநோய் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது
தாய்க்கு புற்றுநோய் என பொய் கூறி தந்தையார் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளதையடுத்து உயிரிழந்த பிள்ளைகளின் தந்தையான அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த குவண்டா ஹண்டி சுபுன் எரண்ட சில்வா மே 28 ம் திகதி வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இதனை தொடர்ந்து குறித்த நபரை மே 29 ம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை நேற்று முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
அதேவேளை மட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்ட இரு சிறுவர்களது உடலை உடற்கூர் பரிசோதனையில் முக்கிய அவலங்களை அரச பகுப்பாய்வுக்கு அனுப்பியதுடன் சடலத்தை குழந்தைகளின் தாயாரிடம் மே 30ம் திகதி ஒப்படைக்கப்பட்டதையடுத்து சடலத்தை தாயார் அவரது மாத்தறை பிரதேசமான ஊருக்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த குழந்தைகளின் தந்தையாரை நேற்று முதலாம் திகதி திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர் படுத்திய போது அவரை குழந்தைகளின் இறுதிக் கிரியைகளுக்காக சரீரப் பிணையில் நீதவான் விடுவித்த போதும் அவரை பிணை எடுப்பதற்கு எவரும் வராத நிலையில் அவரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை குறித்த இரு குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்படவில்லை என பொலிசார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இருந்த போதும் குறித்த நபர் 2020ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டதாக அவர்களது திருமண பதிவில் தெரிய வந்துள்ளதுடன் அவர்களது மூத்த பிள்ளைக்கு 8 வயது என குறிப்பிடப்பட்டுள்ளது பொலிசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதையடுத்து இந்த 3 பிள்ளைகளும் இவர்களது பிள்ளைகளா? என்ற கோணத்தில் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை கைது செய்யப்பட்ட உயிரிழந்த இரு குழந்தைகளின் தந்தைக்கு நீர்கொழும்பில் உள்ள பிரபல போதை பொருள் கடத்தல் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் கண்டறிந்து கொண்டனர் இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Post A Comment:
0 comments so far,add yours