நூருல் ஹுதா உமர்



மலேசியாவின் ஹென்டிங் (Genting) நகரில் நேற்று (04) நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற கல்முனை மாணவன் முஹம்மட் அனாகித் அம்றி இரண்டு போட்டி நிகழ்வுகளிலும் இரண்டாம் இடத்தைப் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

12 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இச்சர்வதேச போட்டியில், சாய்ந்தமருதில் இயங்கி வரும் தாருல் இல்மு கல்வி நிலையத்தின் ஐகம் அபாகஸ் பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற முஹம்மட் ஹனீஸ் முஹம்மட் அனாகித் அம்றி (Level-1) தனது திறமையை வெளிப்படுத்தி இந்த சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

கல்முனை – 05, டாக்டர் ரிஸ்வி வீதியைச் சேர்ந்த எம்.எச். முஹம்மட் ஹனீஸ் மற்றும் ஏ.எம். பாத்திமா இன்ஸிரா தம்பதியினரின் புதல்வரான இம்மாணவர், குறுகிய காலப் பயிற்சியிலேயே சர்வதேச மட்டத்தில் தனது கணிதத் திறனையும் மனக்கணக்குத் திறமையையும் நிரூபித்துள்ளார்.

இந்த வெற்றி இலங்கைக்கும், குறிப்பாக கிழக்கு மாகாணத்திற்கும், கல்முனை மண்ணிற்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சாதனையாகப் பாராட்டப்படுகிறது. சர்வதேச அரங்கில் இலங்கை மாணவர்களின் அறிவாற்றலையும் போட்டித்திறனையும் வெளிப்படுத்தியுள்ள இச்சாதனை, இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது.

மேலும், கடந்த பல ஆண்டுகளாக தாருல் இல்மு கல்வி நிலைய மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனம் மாணவர்களின் அறிவாற்றல் வளர்ச்சிக்கும் திறன் மேம்பாட்டிற்கும் வழங்கி வரும் பங்களிப்பு கல்வித்துறையில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours