நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் மருத்துவ சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களுக்கான ‘அடிப்படை உயிர்காப்பு’ மற்றும் ‘முதலுதவி’ (Basic Life Support – BLS & First Aid) பயிற்சி நிகழ்ச்சி அண்மையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது.


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, பிராந்திய தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம். பௌசாத் ஒருங்கிணைத்திருந்தார்.

கல்முனை பிராந்தியத்திலுள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களிலும் புதிதாக நிறுவப்பட்டுள்ள முதலுதவிக் குழுக்களின் திறனையும் செயற்பாட்டு ஆற்றலையும் வலுப்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.

இதில் சுகாதார வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார தாதிய சகோதரிகள், மேற்பார்வை பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வளவாளராகப் பங்கேற்ற கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுகாதார பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் விரிவுரையாளரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு விசேட வைத்திய நிபுணருமான டொக்டர் ஆர். ராஜவர்மன், அவசரகாலங்களில் உடனடி மற்றும் சரியான நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

மேலும், திடீர் அவசர நிலைகளை சரியாக இனங்காணுதல், இதய மற்றும் நுரையீரல் மீளுயிர்ப்பித்தல் (CPR) செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல், நோயாளிகளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் முன் வழங்கப்பட வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் மற்றும் அவசரநிலைகளில் துரிதமாகவும் திறம்படவும் செயற்படுவதற்கான நுணுக்கங்கள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன.

சுகாதார உத்தியோகத்தர்களின் அறிவு, திறன் மற்றும் அவசரநிலை முகாமைத்துவ ஆற்றலை மேம்படுத்தும் இத்தகைய பயிற்சி நடவடிக்கைகள், கல்முனை பிராந்தியத்தின் அவசர சிகிச்சை மற்றும் பொதுச் சுகாதார சேவை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours