மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், வாயில்லா ஜீவன் மீது வன்முறையை ஏவிய நபரை கல்முனை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் எழுந்த பெரும் கண்டன அலையைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.

வருடாந்த கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் இணைந்து, பக்திப் பரவசத்துடன் பயணித்துக் கொண்டிருந்தது "சுப்பிரமணியன்" என்ற செல்ல நாய். நேற்று (27) சனிக்கிழமை மாலை, கல்முனைக்குடி பிரதான வீதியில் அஷ்ரப் வைத்தியசாலைக்கு (மடுவத்தை) அருகில் இந்த பாதயாத்திரை வந்துகொண்டிருந்தது.

​அப்போது, அங்குள்ள பழக்கடை உரிமையாளர் ஒருவர், எந்தவொரு காரணமுமின்றி அந்த வாயில்லா ஜீவனை மிகக் கொடூரமாக எட்டி உதைத்துள்ளார். 

மனிதநேயமற்ற இந்த கீழ்த்தரமான செயல் அங்கிருந்தவர்களால் படம் பிடிக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. "விலங்குகளிடம் அன்பு செலுத்தத் தெரியாத இவரெல்லாம் ஒரு மனிதனா?" என கண்டனப் பதிவுகள் வைரலாகி, இணையமே அதிரத் தொடங்கியது. 

மக்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து, கல்முனை பொலீசார் உடனடியாகக் களத்தில் குதித்தனர். சம்பந்தப்பட்ட நபரைத் தேடிக் கண்டுபிடித்து, அதிரடியாகக் கைது செய்து பொலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

இந்தச் சம்பவம் குறித்து கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அஸாரைத் தொடர்புகொண்டபோது, அவர் தற்போது புனித மக்கா நகரில் இருப்பது தெரியவந்தது. எனினும், அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாராயணனின் கவனத்திற்கு விவகாரம் கொண்டு செல்லப்பட்டு, இந்தத் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாயில்லா ஜீவனுக்காகக் குரல் கொடுத்து, தவறு செய்தவரைச் சட்டத்தின் முன் நிறுத்திய கல்முனை பொலீசாரின் இந்த 'மின்னல் வேக' நடவடிக்கைக்குப் பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் தங்களது  நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். 


Share To:

Post A Comment:

0 comments so far,add yours