போரதீவுப்பற்று பிரதேச சபையின் 13-வது சபை அமர்வு - சிறுபோக விவசாயிகளின் நெல் விலை விவகாரம் மற்றும் கைவிடப்பட்ட களஞ்சியசாலை குறித்து அவசர பிரேரணை!


மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் 13-வது சபை அமர்வானது இன்று (25.06.2026) காலை 10 மணியளவில், சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் சுமுகமாக ஆரம்பமாகி நடைபெற்றது.

இச்சபை அமர்வின் போது போரதீவுப்பற்று பிரதேசத்தின் பல்வேறு முக்கிய திட்டச் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டு, பல முக்கிய தீர்மானங்கள் சபையில் நிறைவேற்றப்பட்டன.

சிறுபோக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை குறித்து அவசர பிரேரணைஇன்றைய அமர்வில், சின்னவத்தை வட்டார உறுப்பினர் கா.யோகராசா அவர்களால் விவசாயிகளின் மிக முக்கியமான எரியும் பிரச்சினை ஒன்று அவசர பிரேரணையாக முன்வைக்கப்பட்டது.இப்பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றிய அவர்,

"எமது பிரதேச விவசாயிகள் காட்டு யானைத்தொல்லை, நோய் மற்றும் பீடைத்தாக்கங்கள் உள்ளிட்ட பல இன்னல்களுக்கு மத்தியில், பெரும் செலவு செய்து தங்களது விவசாய நிலங்களைப் பாதுகாத்து நெல் விளைவிக்கின்றனர்.

குறிப்பாக, தற்போதைய சிறுபோக அறுவடைக் காலத்தில் நெல்லிற்கு மிகக் குறைந்த விலையே கிடைப்பதால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்."

அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானத்தின்படி நெல்லிற்கு நியாயமான அதிக விலை நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் கொள்வனவு நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் மிகக் குறைந்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்வதனால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

எமது பகுதி மட்டுமன்றி, வடகிழக்கில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளும் இதே நிலையைத்தான் எதிர்கொண்டுள்ளனர்.

எனவே, விவசாயிகளின் நெல்லிற்கு ஒரு நிரந்தரமான, நியாயமான உயர் விலையை உறுதி செய்ய சபை மூலம் உரிய அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இப்பிரேரணை மீதான விவாதத்தின் போது, இப்பிரதேசத்தில் அமைந்துள்ள தும்பங்கேணி நெல்களஞ்சியசாலையின் முறையற்ற செயற்பாடுகள் குறித்து தவிசாளர் விமலநாதன் மதிமேனன் அவர்களால் சபையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

மிகத் தூரத்து கிராமங்களில் இருந்து மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலும், போக்குவரத்துச் செலவுகளைத் தாங்கியும் வரும் ஏழை விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்வனவு செய்ய அதிகாரிகள் மறுப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. 

மாறாக, தமக்கு வேண்டியவர்களிடம் மற்றும் இடைத்தரகர்களிடம் மட்டும் பக்கச்சார்பான முறையில் நெல் கொள்வனவு செய்யப்படுவதாகச் சபையில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

கோவில்போரதீவு நெற்களஞ்சியசாலையை சீரமைக்க உறுப்பினர் ம.கோபிநாத் கோரிக்கை.!

இதனைத் தொடர்ந்து,  உரையாற்றிய கோவில்போரதீவு வட்டார உறுப்பினர் ம.கோபிநாத், விவசாயிகளின் மற்றொரு முக்கிய ஆதங்கத்தை சபையில் சுட்டிக்காட்டினார்.அவர் பேசுகையில்,"கோவில் போரதீவில் அமைக்கப்பட்ட நெற்களஞ்சியசாலை யானது தற்போது எவ்வித பயன்பாடும் இன்றி, நீண்டகாலமாகக் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.  நெற்களஞ்சியசாலையினை உடனடியாகச் சீரமைத்து, விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால், குறிப்பாக மழைக்காலங்களில் நெல்லைப் பாதுகாக்க முடியாமல் தவிக்கும் இப்பகுதி விவசாயிகள் மிகப்பெரிய பயனை அடைவார்கள்" எனத் தெரிவித்தார்.

நெல் விலை விவகாரம் மற்றும் களஞ்சியசாலைப் பிரச்சினைகளைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்ட சபை உறுப்பினர்கள் தத்தமது வட்டாரங்களுக்குத் தேவையான வீதிப் புனரமைப்பு, மின்விளக்கு வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய வேலைத்திட்டங்கள் மற்றும் மக்கள் தேவைகளைச் சபைக்குச் சமர்ப்பித்தனர்.

உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் இறுதியில் சபையினரால் ஒருமனதாக விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

சிறுபோக விவசாயிகளின் உழைப்பு சுரண்டப்படுவதைத் தடுக்கவும், தும்பங்கேணி களஞ்சியசாலையின் முறைகேடுகளைக் களையவும், அதேநேரம் கோவில் போரதீவில் கைவிடப்பட்டுள்ள நெற்களஞ்சியசாலையை உடனடியாகப் புனரமைக்கக் கோரியும் பிரதேச சபை மூலமாக மாவட்ட செயலகத்திற்கும், உரிய அமைச்சுக்கும் அவசர அறிக்கை ஒன்றை அனுப்பி வைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

(ரஞ்சன்)






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours