ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்றான மட்டக்களப்பு, திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று (26.06.2026) ஆம் திகதி வெள்ளிக்கிழமை பக்திப் பெருக்கோடும் வெகுவிமர்சையாகவும் நடைபெற்றது.
இவ்வாலயத்தின் கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான ஆரம்பக் கிரியைகள் கடந்த (20.06.2026) சனிக்கிழமை முறைப்படி ஆரம்பமாகி நடைபெற்று வந்தன.
மங்கள வாத்தியங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க, கிரியாசாரியர்களால் முறைப்படி யாகசாலைப் பூஜைகள் நடத்தப்பட்டு, ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளின் கோபுரக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் பக்திப் பூர்வமாக நடத்தப்பட்டது.
"அரோகரா" கோஷங்கள் விண்ணதிர, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பிள்ளையாரின் அருளைப் பெற்றனர்.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து ஆலயத்தில் தினசரி விசேட மண்டலாபிஷேக பூஜைகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளன.
மண்டலாபிஷேகத்தின் நிறைவு விழாவாக, வரும் (19.07.2026 )ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, 1008 சங்குகளால் சுவாமிக்கு மிகச் சிறப்பான முறையில் சங்காபிஷேகம் நடைபெறவுள்ளதாக ஆலயப் பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.இதற்கான ஏற்பாடுகளை ஆலயப் பரிபாலன சபையினர், திருப்பணிச் சபையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து மிக நேர்த்தியாகச் செய்து வருகின்றனர்.
(ரஞ்சன்)
Post A Comment:
0 comments so far,add yours