கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மட்டக்களப்பு தும்பங்கேணி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின் ஏற்பாட்டில், விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குத் தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் தொடர்பான விசேட விழிப்புணர்வு கருத்தரங்கொன்று நேற்று (16.07.2026)ஆம் திகதி  போரதீவுப்பற்று பிரதேச சபை கலாசார மண்டபத்தில்  நடைபெற்றது.

இவ்வருடத்திற்கான PSDG-2026 திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் வி. மதிமேனன் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் சண்முகராஜா விஜிதராஜா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

பிரதேச சபையின் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களை முதன்மைப்படுத்தி நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில், முன்னாள் மாகாணப் பணிப்பாளர் Dr. பாஸி, திருமதி Dr. S. சங்கீர்த்தனா (கால்நடை வைத்தியர் தும்பங்கேணி)மற்றும் கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் P. ஜயந்தன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர்.

இதன்போது, விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய பல்வேறு தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் மற்றும் விசர்நாய் கடி (வெறிநாய்க்கடி) போன்ற ஆபத்தான நோய்கள் குறித்தும், அவற்றிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் ஊழியர்களுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்கள், எனப் பலரும் கலந்துகொண்டு பயனடைந்ததுடன், இத்தகைய விழிப்புணர்வு தங்களது அன்றாடப் பணிகளின் போது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.


(ரஞ்சன்)



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours