பாறுக் ஷிஹான்



 
நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த, பிரதேச மக்களால் 'ஸ்பைடர் வுமன்' (சிலந்தி பெண்) என அழைக்கப்படும் பெண், சாய்ந்தமருது பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, அவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு (76448) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த வியாழக்கிழமை (13) மாலை சாய்ந்தமருது பொலிஸாரினால் விசேட சோதனையsector ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கல்முனை புறநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து 2310 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 40 வயதுடைய 1 பிள்ளையின் தாயான இச்சந்தேகநபர் பொலிஸாரின் சுருக்குப் பொறியில் சிக்கினார்.

கணவனை இழந்த இவர், தனது உறவினர்களின் ஒத்தாசையுடன் நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பொலிஸார் சோதனையிட வரும் சந்தர்ப்பங்களில், வீடுகளின் மாடிகளில்  இருந்து ஏனைய மாடிகளுக்கு லாவகமாகப் பாய்ந்து தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தமையினாலேயே இவருக்கு மக்கள் 'ஸ்பைடர் வுமன்' எனப் பெயரிட்டுள்ளனர்.

இம்முறை பெண் பொலிஸாரை உள்ளடக்கிய பொலிஸ் குழுவினர் மாறுவேடத்தில் சென்று, நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே கால் உடைந்த நிலையிலிருந்த இவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளனர். இதற்கு முன்னரும் இரு வேறு சந்தர்ப்பங்களில் கைதான இவர், கல்முனை தலைமையக பொலிஸாருக்குப் பெரும் சவாலாக விளங்கியதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் இச்சோதனை நடத்தப்பட்டது.

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வி.பிரகலாதன் தலைமையில், குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வி.ஜீவரத்தினம், பொலிஸ் உத்தியோகத்தர்களான அதுவார் (91775), நிவேதன் (94680), பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சாமிலி (10669) உள்ளிட்ட குழுவினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours