(வி.ரி.சகாதேவராஜா)
இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 25 சதவீத மக்களை தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் அவர்களது உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்காகவுமே இப்பேரவை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
தமிழ்மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவையின் பிரதிநிதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (04) கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது பேரவையின் நோக்கங்கள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் அண்மையில் ஜனாதிபதியுடனும் அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவருடனும் நடைபெற்ற சந்திப்புகளின் பெறுபேறுகளும் எடுத்துரைக்கப்பட்டன.
இலங்கையின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 25 சதவீத மக்களை இந்த அரசியல் பேரவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதையும் பேரவை சுட்டிக்காட்டியது.
மேலும், நீண்ட காலமாக தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவதற்காக பேரவை மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகரின் கவனம் ஈர்க்கப்பட்டது.
இந்த விடயத்தில் இந்திய அரசு தொடர்ந்தும் தனது ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும் என பேரவை நம்பிக்கை தெரிவித்தது.


Post A Comment:
0 comments so far,add yours