பாறுக் ஷிஹான்


 
சம்மாந்துறை நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாகவும் அச்சுறுத்தலாகவும் திரிந்த கட்டாக்காலி மாடுகள், சம்மாந்துறை பிரதேச சபையினரால் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் புதன்கிழமை (05) பிடித்துக் கட்டப்பட்டுள்ளன.

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளினால் தினசரி வீதி விபத்துக்கள் சம்பவிப்பதுடன், பொதுமக்களின் பெறுமதியான பயிர் நிலங்களும் சேதமாக்கப்படுவதாகப் பிரதேச சபைக்கு தொடர்ச்சியாகப் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இதனையடுத்து, இந்த நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் விசேட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைய, பிரதேச சபைகள் சட்டத்தின கீழ் சம்மாந்துறை நகர் மற்றும் பிரதான வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகத் திரிந்த கட்டாக்காலி மாடுகள் பிடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்குப் பிரதேச சபையினால் பல தடவைகள் அறிவுறுத்தல்களும் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் அதனைப் பொருட்படுத்தாது மாடுகளை வீதிகளில் உலாவ விட்டுள்ளனர்.

எனவே, பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் உடனடியாகத் தண்டப் பணத்தைச் செலுத்தித் தமது மாடுகளை பொறுப்பேற்றுச் செல்ல வேண்டும் எனப் பிரதேச சபை அறிவித்துள்ளது.அவ்வாறு பெறத் தவறும்பட்சத்தில், நாளொன்றுக்குரிய பராமரிப்புச் செலவு மேலதிகமாக அறவிடப்படும் என்றும், எதிர்வரும் 3 நாட்களுக்குள் மாடுகளை உரிமையாளர்கள் பொறுப்பேற்கத் தவறினால், பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சம்மாந்துறை பிரதேச சபை எச்சரித்துள்ளது.

இது தொடர்பான மேலதிகத் தகவல்களுக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் 067-2030800 என்ற தகவல் மைய இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours