மட்டக்களப்பு நாவற்குடாவில் அரியரெத்தினம் எனும் இயற்பெயரைக்கொண்ட “வாகரை வாணன்”  அவர்கள்  இன்று (10.08.2026)ல் தனது 85வது அகவையில் காலமானார்.

மட்டக்களப்பின் வடபால் பரந்து விரிந்த பெருநிலப்பரப்பான வாகரையையும் அதனை அண்டிய பகுதிகளின் வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் மக்களின் வாழ்வியலையும் தனது எழுத்துக்களின் ஊடாக வெளிக்கொணர்ந்த தமிழ் அறிஞரும், பிரபல எழுத்தாளரும், இலக்கிய ஆளுமையுமான வாகரை வாணன் அவர்களின் மறைவு தமிழுக்கும் தமிழருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

தமிழ் இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தனது தனித்துவமான ஆளுமையை வெளிப்படுத்தியவர் வாகரை வாணன் அவர்கள். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், சிறுவர் இலக்கியம், வரலாறு, ஆய்வுக்கட்டுரை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் தனது ஆளுமையைப் பதித்தவர்.

நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்து, ஈழத்துத் தமிழ் கலை, இலக்கிய உலகில் தனக்கென அழியாத தடத்தைப் பதித்த சாதனையாளராக அவர் விளங்கினார்.

தமிழ், ஆங்கிலம், லத்தீன் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற பன்மொழியாளராகத் திகழ்ந்த போதிலும், தமிழ் மொழி, தமிழர் வரலாறு, பண்பாடு மற்றும் தமிழ் உணர்வு மீது அளவற்ற பற்றும் அர்ப்பணிப்பும் கொண்டிருந்தார்.

குறிப்பாக, பனிச்சங்கேணியில் அரசாட்சி செய்த வன்னிச்சி நாச்சி அரசியின் வரலாற்றை வெளிக்கொணர்வதிலும், அவரது நினைவைப் போற்றும் வகையில் சிலை நிறுவுவதிலும் அவர் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றில் என்றும் நினைவுகூரத்தக்கது.

ஒரு பெரும் இலக்கியப் பயணம்


சுட்ட பொன், எண்ணத்தில் நீந்துகிறேன், பயணம், துரோணர் சபதம், தமிழ்ப்பாவை, கடற்கரைப் பூக்கள், இனிக்கும் தமிழ், கிறிஸ்து தத்துவம், சின்னச் சின்னக் கதைகள், ஆசிரியன் ஓர் அட்சயப்பாத்திரம், அருளாளர் அந்தோனியார், ஒரு பூ மலர்கிறது, பாலர் தமிழ்ப்பாட்டு, கிறிஸ்து காவியம், சின்னச் சின்னப் பூக்கள், தமிழர் வரலாற்றில் சில பக்கங்கள், ஆய் தமிழ், வாகரை ஒரு வரலாற்றுப் பார்வை, நந்திக்கொடி, பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ், பனிச்சங்கேணி அரசி, கிழக்கிலங்கைத் தமிழகம், மட்டக்களப்புக் காவியம், தமிழ் மண் மட்டக்களப்பு, தலைநிமிர்ந்து நிற்கும் தமிழ், எண்ணங்கள் ஆயிரம் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட படைப்புகள் அவரது நீண்ட இலக்கியப் பயணத்திற்குச் சான்றாகின்றன.


அவரது படைப்புகள் வெறுமனே இலக்கியப் பதிவுகள் அல்ல. மட்டக்களப்பின் வரலாறு, மண், மக்கள், பண்பாடு மற்றும் தமிழ் அடையாளத்தை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாத்து வைத்திருக்கும் வரலாற்று ஆவணங்களாகவும் அவை திகழ்கின்றன.


வாகரை வாணன் அவர்கள் இன்று எம்மை விட்டு பிரிந்தாலும், அவர் எழுதிய நூல்களும், பதிவு செய்த வரலாறுகளும், வெளிக்கொணர்ந்த பண்பாட்டு அடையாளங்களும், தமிழ் மீதான அவரது பற்றும் என்றும் அழியாது.


ஒரு எழுத்தாளர் மறைந்திருக்கலாம், ஆனால் அவர் எழுதிய எழுத்துக்கள் என்றும் மறைவதில்லை.



செ. நிலாந்தன்

சிரேஷ்ட ஊடகவியலாளர்

சிவில் சமூக செயற்பாட்டாளர்

பிரதேச சபை உறுப்பினர்

Share To:

Post A Comment:

0 comments so far,add yours