அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு நாககாளி அம்மன் ஆலயத்தின் புனருத்தாபன எண்ணெய்க்காப்பு மற்றும் ஐந்துகுண்ட குடமுழுக்கு பெருவிழா இன்று (30.08.2026) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.


ஆலயத்தின் புனருத்தாபனப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த (28.08.2026)ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமான பெருவிழா நிகழ்வுகளில் பல்வேறு சமயக் கிரியைகள் இடம்பெற்றன.


இதன் தொடர்ச்சியாக நேற்று (29.08.2026)ஆம் திகதி  சனிக்கிழமை விநாயகர் வழிபாடு, வேள்விச்சாலை கிரியைகள், வேதபாராயணம், திருமுறை ஓதுதல் உள்ளிட்ட பல்வேறு சமயக் கிரியைகளுடன் புனருத்தாபன எண்ணெய்க்காப்பு நிகழ்வும் நிறைவுபெற்றது.


இந்நிலையில், இன்று அதிகாலை முதல் விநாயகர் வழிபாடு உள்ளிட்ட விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், வேள்விச்சாலை கிரியைகளும் ஆகம முறைப்படி முன்னெடுக்கப்பட்டன.


இதனைத் தொடர்ந்து சிவஸ்ரீ சண்முக வசந்தன் குருக்களின் திருத்தலைமையில் ஐந்துகுண்ட குடமுழுக்கு பெருவிழா நடைபெற்றது. ஆலயத்தின் பிரதம குருவான சிவஸ்ரீ வி. நடராஜா குருவினால்  சமயக் கிரியைகளை முன்னெடுத்தார்.


குடமுழுக்கு பெருவிழாவில் புனித நீர் குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, ஆலய மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.


 இதன்போது பெருமளவான பக்தர்கள் மற்றும் அடியார்கள் கலந்து கொண்டு நாககாளி அம்மனின் அருளைப் பெற்றனர்.


இன்றைய குடமுழுக்கு பெருவிழாவில் நீத்தை இராணுவ அதிகாரி அசெல பண்டார, பனங்காடு கிராம அபிவிருத்திச் சங்க  தலைவர் இ. சுவர்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன், ஆலய நிர்வாகத்தினர், திருப்பணிக் குழுவினர், மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


அத்துடன், குடமுழுக்கு பெருவிழாவில் கோளாவில் ஒளியின் எழுச்சி அமைப்பினரால் பக்தர்களுக்கு தாகசாந்தி வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட ஆலய புனருத்தாபனப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் இடம்பெற்ற இக்குடமுழுக்கு பெருவிழா, பக்தர்களின் பெருமளவான பங்கேற்புடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.


(எஸ்.ரஞ்சன்)






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours