போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியில் பல வருட காலமாக நிலவி வந்த இருள் சூழ்ந்த நிலைமைக்குத் தீர்வாக, புதிய தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. 

இதன் மூலம் பொதுமக்கள் இரவு வேளைகளில் காட்டு யானைகளின் அச்சமின்றி நிம்மதியாகப் பயணிக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) சொந்தமான மட்டக்களப்பில் இருந்து வீரமுனை செல்லும்  வீதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாக இது காணப்படுவதால், போதிய வெளிச்சமின்றி இரவு வேளைகளில் இவ்வீதியினூடாக பயணித்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் பயணித்ததுடன், அடிக்கடி விபத்துகளுக்கும் யானை தாக்குதல்களுக்கும் இலக்காகி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன.

​பொதுமக்களின் இந்த பாதுகாப்பற்ற நிலைக்குத் தீர்வுகாணும் வகையில், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் அவர்களின் தீவிர முயற்சியினால், களுவாஞ்சிகுடி மின்சார சபையினூடாக துரித கதியில் மின் இணைப்புகள் பெறப்பட்டன.

கடந்த 12.08.2026 -  13.08.2026ஆம் திகதி  வரையிலான காலப்பகுதிக்குள் 35 புதிய தெருவிளக்குகள் அமைக்கும் பணிகள் போரதீவுப்பற்று பிரதேச சபையின் மின் பணியாளர்களினால் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வீதியில் புதிய தெருவிளக்குகள் ஒளிரத் தொடங்கியுள்ளதால், இரவு நேரங்களில் பயணிகளும் பொதுமக்களும் அச்சமின்றி நிம்மதியாக பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு கண்ட போரதீவுப்பற்று பிரதேச சபைக்கும், அதன் தவிசாளருக்கும்  பொதுமக்கள் தமது  நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.









Share To:

Post A Comment:

0 comments so far,add yours