​மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை, 35ஆம் கிராமம், கண்ணபுரம் மற்றும் கண்ணபுரம் கிழக்கு ஆகிய கிராமங்களில் நீண்டகாலமாகப் பராமரிப்பின்றிப் பாழடைந்து காணப்படும் காணி வளவுகளால் பொதுமக்கள் கடுமையான உயிர் மற்றும் சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இக்காணிகளில் காடு போல் அடர்ந்து வளர்ந்துள்ள புதர்களை மறைவிடமாகக் கொண்டு நச்சுப் பாம்புகள், விஷப் பூச்சிகள் மற்றும் காட்டு யானைகள் இலகுவாகக் கிராமங்களுக்குள் ஊடுருவி வருகின்றன.

அத்துடன், தேங்கி நிற்கும் மழைநீரினால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு நோய் பரவும் அபாயமும் அப்பகுதியில் தீவிரமடைந்துள்ளது.

களத்தில் இறங்கிய அதிகாரிகள் -அதிரடி நடவடிக்கை!

இப்பச்சினைகள் குறித்து பொதுமக்கள் விடுத்த அவசர கோரிக்கையை அடுத்து, நேற்று (14.08.2026) போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் தங்கராசா கயசீலன் தலைமையில் விசேட கள விஜயமும் விழிப்புணர்வு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

பாலையடிவட்டை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் சிவபாலன் ஜீவிதன் அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நடவடிக்கையில், கிராம உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் பலரும் இணைந்துகொண்டனர்.

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள காணிகளைத் தூய்மைப்படுத்தாமல் கைவிட்டு, வெளியூர்களில் வசித்து வரும் காணி உரிமையாளர்களை இனங்காணும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

​அதிகாரிகளின் இறுதி எச்சரிக்கை..!

"இன்னும் ஒரு வார காலத்திற்குள் பாழடைந்த காணிகளை உரிமையாளர்கள் துப்பரவு செய்ய வேண்டும்.

தவறும்பட்சத்தில் அவர்களுக்கு எதிராக உடனடியாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்" எனத் தெரிவிக்கும் விசேட எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்கள் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் விநியோகிக்கப்பட்டுள்ளன.


​பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கருதி அதிகாரிகள் எடுத்த இந்த உடனடி மற்றும் அதிரடி நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள் தமது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.


(எஸ்.ரஞ்சன்)



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours