பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட கோமாரி கிராம மக்களினால் சேனைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் ஊத்துமடு, டிப்போஅடி, காட்டுமடு, முருங்கன்தனை, 60ம் கட்டை போன்ற பிரதேசங்களுக்கான காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படாமை தொடர்பில் குறித்த விடயங்களை ஆராயும் முகமாக இன்றைய தினம் ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகன் கோமாரி பிரதேச சேனைப்பயிர்ச்செய்கையாளர்களைச் சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தார்.


சுமார் அறுபது எழுபது வருடங்களுக்கு மேலாக குறித்த பகுதிகளில் சேனைப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் மக்களுக்கு குறித்த காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் இன்னும் வழங்கப்படாத நிலையில் தற்போதைய நிலையில் குறித்த பயிர்ச்செய்கை நிலங்களுக்கு செல்லும் மக்கள் மீது வனவள பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை எடுக்கின்றமை தொடர்பில் குறித்த பிரதேச மக்களினால் தெரிவிக்கப்பட்டமையைத் தொடர்ந்து குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


தாங்கள் பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்து குறித்த பிரதேசங்களில் பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வருவதாகவும், ஒவ்வொரு வருடமும் மாரி மழையை நம்பி பயிர்ச்செய்கை நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு ஆயத்தமாகி வருகின்ற நிலையில் குறித்த நான்கு வருட காலமாகவே வனவள பாதுகாப்புத் துறையினால இப்பிரச்சனை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.







இதற்கு முன்னர் குறித்த சேனைப்பயிர்ச்செய்கை நிலங்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்களுக்காக 2011ம் ஆண்டு விண்ணப்பத்தினை மேற்கொண்டு அதற்கான பற்றுச் சீட்டு பெறப்பட்டிருந்த போதிலும் இதுவரை இக்காணி தொடர்பில் அனுமதிப்பத்திரம் வழங்கப்படாத நிலையில் ஒவ்வொரு வருடமும் குறித்த மக்கள் அசௌகரியங்களை எதிர்நேக்கி வருகின்றனர்.


குறித்த மக்களின் காணிப்பிரச்சனைகள் தொடர்பில் காணி ஆணையாளர் நாயகம் மற்றும் கிழக்கு மாகாண காணி ஆணையாளருடன் தான் தொடர்பு கொண்டுள்ளதாகவும், குறித்த பிரதேசத்தில் காலாகாலமாகப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் மக்களுக்கான காணி அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்கு உரியநடவடிக்கை எடுப்பதாகவும், கிழக்குமாகாண காணி ஆணையாளரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துத் தருவதாகவும் ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours